புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சக்தி சக்திதாசன்
சந்தத நிகழ்வு 233 இன்பம். எங்கே?விதைந்திட்ட விதைகள்
விரிந்தங்கு செடிகளாய்
விளைசல்கள் மனதிலே
வியந்து பார்க்கையிலே
வினைகளை அறுப்போர்
விதைத்தது அதுவே !
தினைகளைத் தேடும்
தீட்சமான விழிகள்
இன்பத்தின் வாசலில்
இருக்கின்ற வேளைகள்
துன்பத்தின் ஞாபகம்
தூரத்தில் மறைந்திடும்
இறக்கத்தில் மகிழ்வுடன்
இறங்குவோர் ஆயிரம்
ஏற்றத்தை எண்ணுவரோ ?
ஏனிந்த குறைப்பார்வை ?
சிந்தனைப் பறவையின்
சிறகினை உடைத்திட்டு
வானத்தில் பறக்காமல்
வாடிப்போய் நிற்போர்கள்
உண்மையை மறைத்து
உள்ளத்தை ஏமாற்றி
வாழ்வினைக் குறைகூறும்
வேடிக்கை உலகம்தான்
நம்வாழ்வு நம்கையில்
நாமறியாமல் வாழ்கிறோம்
எமக்குள்ளே எல்லாமும்
எங்கெங்கோ தேடுகிறோம்
நினைப்பவை எல்லாமே
கிடைப்பதும் இல்லை
கிடைத்தவை அனைத்தும்
நிலைப்பதும் இல்லை
வருடங்கள் பலபத்து
விரைவாய் ஓடியபின்னே
அடைந்திட்ட அனுபவங்கள்
அறிவூட்டிய பாடங்கள்
உண்மையின் அர்த்தம்
உள்ளத்தில் பதிந்ததும்
தேவைகளின் தேடல்மாறி
தேடல்கள் தேவைகளாகின்றன
அனைவரும் ஒன்றென்றும்
அனைத்தும் சமனென்றும்
உடலென்னும் உடைக்குள்
உள்ளதெல்லாம் ஆன்மாவே
மதங்களைக் கடந்தொரு
மனதினைக் கொண்டிட்டால்
மிகையான ஆன்மீகத்தை
மகிழ்வுடன் அறிந்திடலாம்
சக்தி சக்திதாசன்
