வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி
காணாமல் போனதம்பியரே…….!
உமக்கொரு கடிதம்.
“”””””””””””””””””””””””””””””
எங்கே தேடுவேன்? எதுவும் முகவரி?
எங்கே எழுதுவேன்?எப்படிச் சேர்ப்பேன்?
எத்தனை விடயம் உம்மிடம் பேச……
அத்தனை அலைகள் அடிமனத் திடையே
சிந்தையை நிறைத்துச் சிதறா துறையுது!
விந்தையும் இதுவே விரும்பினேன் அழவே
எந்தையை இழந்தோம் ஏதிலி யானோம்
உடன் பிறப்புகளே! உண்மைகொள் உறவே!
கடனது செய்யும் கடமைகள் உமக்கே
இன்றுநீர் இருந்தால் இனிக்கும் என்வாழ்வு
துன்பியல் நாடகத் தொடரரங் கானீர்
உள்ளே ஓலம் ஓயாத சோகம்
பள்ளம் பறித்துப் பாயுதென் கண்ணீர்
எங்கே செல்வேன் எப்படித் தேடுவேன்
பங்கில் உதித்தீர் பதிவுகள் ஆனீர்
ஏனெமைப் பிரிந்தீர்? எங்கே மறைந்தீர்?
கூனென வாகினும் குலமுறை வழுவோம்
அன்றுனைப் பிரிந்த அவலம் அதனால்
அன்னை பிரிந்தார் அறிந்தீரா?இல்லையா?
நடந்தது என்னவென் றெழுதிடும் வரிகளில்
இடந்தனை அறியவும் இயலுமை யாகுமோ?
அன்றிதை படிப்பேன் அசையும் உம்காற்றில்
அன்றேல் வருவேன் உம்மிடம் கேட்க!
