Jeya Nadesan May Thienam-222
மே தினமே மேதினியில் (712)
நகுலவதி தில்லைத்தேவன்
“முள்ளிவாய்க்கால்”
முள்ளிவாய்க்கால் நினைவு முகிழுகின்ற போதெல்லாம்
உள்ளூரும் உன் நினைவு
உள்ளத்தை வாட்டுகுது.
எழுபத்து ஏழில்
எழுந்த இன கலவரத்தில்
அடிபட்டு வந்த உன்னை
அகதியாய் முதல் கண்டோம்.
பெற்றோர்க்கு மூத்த
பிள்ளையாய் பொறுப்போடு
மற்றோர்க்கும் உதவும்
மனதால் எமை கவர்ந்தாய்!
கம்பன் காவியத்தில்
கண்ட சீதையைப்போல்
அம்பாள் குளத் இருந்த
அன்பான சீதா நீ.
காந்தீயம் இயக்கத்தின்
கடமைகளில் துடிப்போடு
ஈய்ந்த சேவையினால்
ஈர்த்தாய் எம் மனதை.
எண்பத்தி மூன்றில்
எழுந்த இன கலவரத்தில
புண்பட்டு வந்தோர்க்கு
புகலிட முகாம் அமைத்து
றோட்டறி கழகத்தால்
கிளிநொச்சி நகர் அருகே
ஆதரித்து நாம் இயக்க
ஆண்டு இரண்டாய் உழைத்தவளே!
ஜெயபுரத்தில் குடியேற்ற
சீவித்து அகதிகளின்
அகம் நிறைந்த உறவாக
அவர்களுடன் வாழ்ந்தவளே!
அள்ளுண்டு போன
ஆயிரமாம் உறவோடு
முள்ளி வாய்க்கால் போக
முன்னமே மடிந்தவளே!
ஷெல் விழுந்து உன்னையும்
சேர்த்தே உன் தந்தையையும்
கொல்வதென விதி எழுத்தோ
கொடுங்கோலர் பலி எடுப்போ?
ஜயா தம்பு சைவன்
ஆலயத்தை அமைத்து நிதம்
செய்த பூசை தொண்டை
சிவன் கூட மறந்தாரோ!
கொள்ளி குடம் உடைக்க
கூட ஒருவர் இன்றி
அள்ளி மணல் கொட்டி
அடக்கத்தை செய்த உந்தன்,
சிதறுண்ட உடல் சாபம்
சீரளிக்கும் சிங்களத்தை
இதயத்தில் எம்மோடு
இறவாது நீ வாழ்வாய்!
-எல்லாளன்-
