**கூட்டணி மட்டும் போதாது என்ற ரணிலின் கருத்து: திஸ்ஸ அத்தநாயக்க விளக்கம்**
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது மட்டுமே வெற்றிக்குப் போதுமானதாக இருக்காது என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கது என, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது ரணில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான அரசியல் கூட்டணிகளைத் தாண்டி, இளம் தலைமுறையினரிடம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையே ரணில் வலியுறுத்தியுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமளித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு விருப்பமில்லை என்று ரணில் கூறியதாக அந்தக் கருத்தைத் திரிபுபடுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆட்சியைத் தீர்மானிப்பதில் இளைஞர்கள் முக்கிய சக்தியாக இருப்பதால், அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கிராம மட்டத்திலிருந்து மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருவதாகவும், எதிர்வரும் ஆண்டில் கட்சிச் செயற்பாடுகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

