காத்திருப்பு..!!
📚 சிறுவர் சிறுகதை 📚
“ரோபின்! உங்களுக்குத்தானே உடம்பு சரியில்லை? கொஞ்ச நேரம் படுக்கலாமே? இரவு இரவாக இருமிக்கொண்டிருந்தீர்கள். இப்பொழுது ஜன்னலருகில் நின்று ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் அம்மா.
“அம்மா! இன்றைக்கு நான் பள்ளிக்கூடம் போகவில்லைத்தானே?”
“ஓம் ரோபின்! நீங்கள் போக முடியாது. உங்களுக்கு இருமல், தடிமல், அதோடு காய்ச்சல்.”
“அதுதான் அம்மா! நான் இன்றைக்குப் பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் எங்களுடைய வகுப்பு ஆசிரியர் வீட்டுப்பாடத்தை மதனிடம் கொடுத்து விடுவதாகச் சொன்னவர்.
ஏனென்றால், நான் பள்ளிக்கூடத்திற்கு வராவிட்டால் மதன்தான் எனக்கு வீட்டுப்பாடம் கொண்டுவந்து தரவேண்டும். மதன் பள்ளிக்கூடம் போகாவிட்டால் அவனுக்கு வீட்டுப்பாடத்தை நான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.”
“ஓம் ரோபின்! அது எனக்குத் தெரியும்தானே! மதன் கொண்டுவந்து தருவார். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது பள்ளிக்கூடம் முடிய. நேரத்தைப் பாருங்கோ!” என்றாள் அம்மா.
“ஓம் அம்மா! ஆனால் மதன் வந்து கூப்பிடும்போது அல்லது கதவு மணியை அழுத்தும்போது எங்களுக்குக் கேட்காவிட்டால் என்ன செய்வது?”
“ரோபின்! எல்லாம் கேட்கும். ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். உங்களுடைய வீட்டுப்பாடத்தை மதன் கொண்டுவந்து தருவார்.
நீங்கள் ஓய்வெடுத்துவிட்டு நாளைக்கு உடம்பு சுகம் வந்தால் பள்ளிக்கூடத்திற்குப் போகலாம். இல்லையென்றால் சுகமான பிறகு போகலாம். வந்து ஓய்வெடுங்கோ! வாங்கோ!”
“அம்மா! மதன் வருவார்தானே?”
“ஓம் ரோபின்! கட்டாயம் மதன் வருவார். உங்களுடைய வகுப்பு ஆசிரியர் எனக்குத் தொலைபேசி மூலம் சொன்னவர்.
‘மதன் வீட்டுப்பாடம் கொண்டுவருவான். வாங்கி உங்கள் மகனிடம் கொடுங்கோ’ என்று சொன்னவர்.”
“சரி அம்மா! அப்ப நான் கொஞ்ச நேரம் போய்ப் படுக்கிறேன். மதன் வந்தால் என்னை எழுப்புங்கோ!”
“சரி ரோபின்! போய்ப் படுங்கோ!”
“பிள்ளையே! எனக்கு உண்மையிலேயே பெருமையாகத்தான் இருக்கிறது. உடம்பு சுகமில்லையென்றாலும் பள்ளிக்கூடப் பாடம், நண்பனின் வருகை இதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்களே!
உங்களுடைய ஊக்கமும் முயற்சியும் அம்மாவுக்குச் சந்தோசத்தைத் தருகிறது!” என்றாள் அம்மா.
✍️ ஆக்கம்: சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து
வாழ்த்துகள் & கருத்துகள்
இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.
