மிதுசனும் காணாமல் போன பூனைக்குட்டியும்!!!
🐈 மிதுசனும் காணாமல் போன பூனையும்!
🌸 சிறுவர் சிறுகதை 🌸
அன்று மிதுசன் தனது அம்மாவுடன் கடைக்குச் சென்றிருந்தான்.
கடையின் வாசலில் இருந்த கண்ணாடிக் கதவில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய துண்டுப் பிரசுரம் அவனது கண்களைக் கவர்ந்தது.
அதில் பெரிய எழுத்துகளில் “காணவில்லை!” என்று எழுதப்பட்டிருந்தது.
மிதுசன் ஆர்வத்துடன் அந்த அறிவித்தலை வாசிக்கத் தொடங்கினான்.
“எங்கள் செல்லப் பூனையை இரண்டு நாட்களாகக் காணவில்லை. வயது இரண்டு. கருப்பு நிற உடலில் ஆங்காங்கே சிறிய வெள்ளைப் புள்ளிகள் காணப்படும். எங்காவது கண்டவர்கள் அல்லது கண்டுபிடித்துத் தருபவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளவும்.”
அந்த அறிவித்தலை வாசித்ததும் மிதுசனின் மனம் கலங்கியது.
“ஐயோ! சின்னப் பூனைதானே! இரண்டு வயதுதானே ஆகிறது. எங்கே போயிருக்கும்? வீட்டை விட்டுப் பிரிந்தபோது எவ்வளவு கவலைப்பட்டிருக்கும்? இப்போது சாப்பிட்டிருக்குமா? உயிரோடு இருக்குமா?”
இப்படி எண்ணற்ற கேள்விகள் அவனது பிஞ்சு மனதில் எழுந்தன.
அப்போது,
“மிதுசன்! மிதுசன்! ஏன் கடை வாசலிலேயே நிற்கிறீங்கள்? உள்ளுக்கு வாங்கோ!” என்று அம்மா அழைத்தாள்.
“அம்மா! இந்தப் பூனையைக் காணவில்லையாம். பாவம் அம்மா! அது எங்கே போயிருக்கும்?” என்று கவலையுடன் கேட்டான்.
“அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அதை வளர்த்தவர்கள் கவனமாக வைத்திருக்க வேண்டாமா?” என்று கூறியபடி அம்மா அவனை அழைத்துக்கொண்டு கடைக்குள் சென்றாள்.
ஆனாலும் மிதுசனின் மனம் அந்தப் பூனையையே சுற்றிச் சுற்றி வந்தது.
கடைக்குள் இருந்த பொருட்களைக்கூட அவனால் சரியாக இரசிக்க முடியவில்லை.
“பாவம்! அந்தப் பூனைக்குப் பசிக்குமே! அதற்குத் தனது வீட்டைக் கண்டுபிடிக்கத் தெரியுமா? அதன் உரிமையாளர்கள் எவ்வளவு கவலைப்படுவார்கள்?”
என்று தனக்குள் நினைத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் அம்மா பொருட்களை வாங்கி முடித்தாள்.
இருவரும் கடையை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது மிதுசன் மீண்டும் அந்தத் துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தான்.
“அம்மா! இந்தத் தொலைபேசி இலக்கத்தை உங்களுடைய கைப்பேசியில் பதிவு செய்து வையுங்கோ!”
“எதற்காக மிதுசன்?”
“அம்மா! நாங்கள் எங்காவது அந்தப் பூனையைக் கண்டால் உடனே இவர்களுக்குச் சொல்லலாம்தானே!”
மகனின் வார்த்தைகளைக் கேட்ட அம்மா ஒரு கணம் அமைதியானாள்.
அந்தச் சிறிய உள்ளத்தில் நிறைந்திருந்த அன்பை உணர்ந்தாள்.
“சரி மிதுசன்! நீ சொல்வது நல்ல யோசனைதான்!” என்று கூறியபடி அந்தத் தொலைபேசி இலக்கத்தைத் தனது கைப்பேசியில் பதிவு செய்துகொண்டாள்.
மிதுசனின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்தது.
“அம்மா! அந்தப் பூனை எப்படியாவது அதன் வீட்டிற்குத் திரும்பிப் போக வேண்டும்!”
என்று ஆசையுடன் கூறினான்.
அம்மா அவனது தலையை அன்புடன் வருடினாள்.
உயிரினங்களின் வலியை உணர்வதற்கும் அவற்றின் மீது அன்பு செலுத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல!
அந்தப் பிஞ்சு உள்ளத்தில் மலர்ந்த உயிரின நேசம் எவ்வளவு உன்னதமானது!
🌷 கதையின் நீதி 🌷
உயிரினங்களும் நம்மைப் போலவே பசியையும் பயத்தையும் பிரிவின் துயரத்தையும் உணரக்கூடியவை. அவற்றின் மீது அன்பும் இரக்கமும் காட்டுவது மனிதநேயத்தின் அழகிய பண்பாகும்.
🌹 நன்றி! வணக்கம்! 🌹
✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து.
வாழ்த்துகள் & கருத்துகள்
இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.
