நாளைய தலைவர்கள்!
🌼 சிறுவர் சிறுகதை 🌼
“என்னப்பா! வேலையால் வந்த நேரம்கூடத் தொலைபேசியிலேயே இருக்கிறீங்க? பக்கத்தில் வைத்த தேத்தண்ணிகூட ஆறிப்போச்சு!”
என்று கணவனைப் பார்த்துக் கேட்டாள் மனைவி.
“சரி, சரி! தேத்தண்ணி ஆறிப்போனால் ஆறிப்போகட்டும். திரும்பவும் வேற தேத்தண்ணி கொண்டு வாரும்!!
“என்னப்பா இப்படிச் சொல்லுறீங்க?”
“சரி, சரி! விடப்பா! இப்பதானே வேலையால் வந்தேன். கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடு. வந்து கனக்கக் கதைக்காதே!”
என்று கூறியபடி மீண்டும் தனது கைப்பேசியைப் பார்க்கத் தொடங்கினான் .
அப்போது அவருடைய மகன் முகிலன் மகிழ்ச்சியுடன் ஓடிவந்தான்.
“அப்பா! அப்பா! இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் ரீச்சர் இந்தப் படத்தைக் கீறித் தந்து அழகாகக் கலர் அடிக்கச் சொன்னவா. அப்பா! இங்க பாருங்கோ! நான் எவ்வளவு அழகாகக் கலர் அடிச்சிருக்கிறேன்!”
என்று தான் வண்ணம் தீட்டிய ஓவியத்தைத் தந்தையிடம் ஆசையுடன் காட்டினான்.
ஆனால் தந்தையோ கைப்பேசியிலிருந்து பார்வையை எடுக்காமலேயே,
“சரி, சரி! அது வடிவாக இருக்கு. கொண்டுபோய் வைச்சிட்டு வேற வேலையைப் பாருங்கோ!”
என்றார்.
முகிலனின் முகம் வாடிப்போனது.
மகனின் முகம் வாடியதைக் கவனித்த அம்மாவுக்குக் கோபம் வந்தது.
“இப்படித்தான்! இப்படித்தான்! எப்பவும் செய்வீங்க! அந்தப் பிள்ளை ஆசையாகப் பள்ளிக்கூடத்தில் செய்ததைக் காட்டிக்கொண்டு வந்திருக்கிறான். உங்களால் ஒரு ஐந்து நிமிடமாவது ஒதுக்கி அதைப் பார்க்க முடியாதா? அந்தப் பிள்ளையின் முகத்தைப் பார்த்தீங்களா?”
என்று கேட்டாள்.
“என்னப்பா! எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாய். நான்தானே நல்லாயிருக்கென்று அவனுக்குச் சொல்லிட்டேன்!”
என்றார் அப்பா.
அப்போது முகிலன் கவலையுடன் பேசத் தொடங்கினான்.
“இல்லையப்பா! நீங்க வடிவாகப் பார்க்கவே இல்லை. நான் எப்படி இந்தப் படத்துக்குக் கலர் அடிச்சேன் என்று கேட்கவும் இல்லை.
என்னோட படிக்கிற நண்பன் என்னிடம் சொல்லுவான். அவன் என்ன செய்து கொண்டு வந்தாலும் அவனுடைய அப்பா அதை வடிவாகப் பார்த்துப் பாராட்டுவாராம்.
அவன் நல்லாச் செய்தால் பரிசுகள்கூட வாங்கிக் கொடுப்பாராம். அதை அவன் எனக்குச் சொல்லிச் சந்தோஷப்படுவான்.
ஆனால் நீங்க ஒரு நாளுமே எனக்கு அப்படி எதுவும் வாங்கித் தந்ததில்லை.
நான் என்ன வடிவாகச் செய்தாலும் நீங்க அதைப் பார்ப்பதே இல்லை, அப்பா!”
என்று கவலையுடன் கூறினான் முகிலன்.
மகனின் வார்த்தைகளைக் கேட்ட தந்தையின் மனம் மெல்ல உருகியது.
அப்போதுதான் அவர் தனது தவறை உணர்ந்தார்.
குழந்தைகள் தங்களுடைய படிப்பு, திறமை, விருப்பங்கள் தொடர்பாக ஏதாவது சொல்லவோ காட்டவோ வரும்போது, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அவர்களுடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தார்.
உடனே தனது கைப்பேசியை ஒதுக்கி வைத்துவிட்டு,
“சரி, சரி! முகிலன்! அந்தப் படத்தை இன்னொருக்கா கொண்டு வாங்கோ. அப்பா வடிவாகப் பார்க்கிறேன்!”
என்றார்.
முகிலன் மகிழ்ச்சியுடன் ஓவியத்தைத் தந்தையிடம் கொடுத்தான்.
அதை வாங்கி உற்றுப் பார்த்த தந்தை,
“ஆகா! எவ்வளவு அழகாக இருக்கு! இந்தச் சின்னக் கைகளால் இவ்வளவு அழகாக எப்படி வண்ணம் தீட்டினீங்க?
உண்மையிலேயே நல்லாச் செய்திருக்கிறீங்க!
நாளைக்கு உங்களுக்குப் பிடித்த பொருட்களை அப்பா வாங்கிக்கொண்டு வருகிறேன்.
இதேபோலத் தொடர்ந்து அழகாகச் செய்யுங்கோ!”
என்று மகனை அன்புடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட முகிலனின் முகம் ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக உதித்ததுபோலப் பிரகாசித்தது!
தந்தையின் பாராட்டும் அன்பும் அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்தன.
அன்று முதல் தன்னுடைய மகனுக்காக நேரம் ஒதுக்கி, அவனுடைய திறமைகளைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று தந்தையும் மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டார்.
🌷 கதையின் நீதி 🌷
குழந்தைகளே நாளைய உலகத்தின் தலைவர்கள்!
அவர்களுடைய திறமைகளை இனங்கண்டு பாராட்டுவதும், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதும், அவர்களுடைய விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகும்.
குறிப்பாக, ஒரு குடும்பத்தின் தலைவனாக இருக்கும் தந்தை, தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
குழந்தைகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கு முன்னர், பெற்றோராகிய நாமே திருந்திப் பழகுவோம்!
✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து
வாழ்த்துகள் & கருத்துகள்
இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.
