பொட்டு வைத்து வா சுமதி!!
🌸 பொட்டு வைத்து வா சுமதி! 🌸
🌷 சிறுவர் சிறுகதை 🌷
“சுமதி! சுமதி! எவ்வளவு நேரமா வெளிக்கிடுறீங்க? நாங்க இப்ப கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும்.நேரம் போகுது. அப்பா பேசப் போறார்.”
“அப்பா ! அப்பொழுதே வெளிக்கிட்டு, காரடிக்குப் போட்டார்.. நானும் சாரி எல்லாம் உடுத்திட்டுத் தயாராகிவிட்டேன்.”
“ஏன் சுமதி! இவ்வளவு நேரம் செல்லுது? கொஞ்சம் வேகமா வெளிக்கிடப் பழகுவோம்.”
“அம்மா! நீங்க வேகமா வெளிக்கிட்டுட்டீங்கன்றதுக்காக நானும் வேகமா வெளிக்கிட ஏலாது. நான் எல்லா நகையும் போட்டு, எனக்குப் பிடிச்ச மாதிரி எல்லாம் வடிவா வெளிக்கிட்டு வரவேணும் இல்லையா? கல்யாண வீட்டுக்கு அப்படித்தான் எல்லாருமே வருவீனம். ஏன் என்னை அவசரப்படுத்துறீங்க?”
“சரி, சரி சுமதி! வாங்கோ! கதைச்சுக்கொண்டு நிற்காமல். நான் செருப்பு எடுத்துக்கொண்டு வெளியில் போறேன். நீங்க வெளியில் வரேக்க சொல்லுங்கோ. நான் கதவைப் பூட்டிட்டுப் போறேன்.”
“சரி அம்மா! கொஞ்சம் எனக்காகக் காத்திருங்க.”
“சரியா அம்மா! போகலாம்.”
“சுமதி! பொட்டு வைக்கலையா?”
“பொட்டா? என்னத்துக்குப் பொட்டு?”
“என்ன சுமதி! நீங்க இவ்வளவு அழகா தமிழ்ப் பண்பாட்டிலே பாவாடை, தாவணி எல்லாம் உடுத்தியிருக்கீங்க. தலைமுடி எல்லாம் அழகாச் செய்துவிட்டிருக்கீங்க. ஆனா பொட்டு வைக்கலையே?”
“ஏன் அம்மா பொட்டு வைக்கணும்?”
“சுமதி! பொம்பிளைப் பிள்ளைகள் பொட்டு வைக்கணும். தமிழர் பண்பாட்டிலே அதுவும் ஒரு பகுதியா இருக்கு. முகத்துக்கு அழகா இருக்கும் பெண் குழந்தைகளுக்கு !நீங்க பொட்டு வையுங்கோ. அது எங்களுடைய பண்பாடு.”
“அம்மா! சும்மா பண்பாடு, பண்பாடுன்னு சொல்றீங்க. பொட்டு வைக்க எனக்கு விருப்பம் இல்ல. வேற நாட்டவர்கள் பொட்டு வச்சா ஏன் வைக்கிறீங்க என்று கேட்பாங்களே!”
“ஏன் சுமதி? கேட்டால் சொல்லுவோம். இது எங்களுடைய பண்பாடு என்று. எப்படி ஆடைகள், அணிகலன்கள் எல்லாம் அணிகிறோமோ, அதுபோலப் பொட்டும் எங்களுடைய ஒரு பண்பாடு. பெண் பிள்ளைகள், திருமணம் செய்தவர்கள், வயது போனவர்கள் எல்லாருமே பொட்டு வைக்கலாம்.”
“சரி அம்மா! விடுங்கோ! ஓடிப்போய்ப் பொட்டு வச்சுக்கொண்டு வாறேன்.”
என்று வேகமாக வீட்டுக்குள் ஓடுகிறாள் சுமதி.
“ஆம்! பெண் குழந்தைகளுக்குப் பொட்டு எவ்வளவு அழகாக இருக்கும்! அதிலும் குறிப்பாகத் தமிழர் பண்பாட்டில் பொட்டு என்பது முக்கியமான வடிவம் அல்லவா?”
வாழ்த்துகள் & கருத்துகள்
இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.
