AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்

நித்தீஷின் முகம் ஏன் வாடியிருக்கு?

.

🌸 நித்தீஷின் முகம் ஏன் வாடியிருக்கு? 

🌼 சிறுவர் சிறுகதை 

அது ஓர் அழகான சிறுவர் பாடசாலை.

நான்கு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளையாட்டும் கல்வியுமாக மகிழ்ச்சியுடன் கற்கும் வகுப்பறை.

வழமைபோல அன்றும் வகுப்பு ஆரம்பமாகும் நேரம்.

ஆசிரியை மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தபடி வகுப்பறைக்குள் வந்தார்.

“காலை வணக்கம், பிள்ளைகளே!!

“காலை வணக்கம், ரீச்சர்!” என்று குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ஆசிரியை ஒவ்வொரு குழந்தையின் முகத்தையும் அன்புடன் உற்று நோக்கினார்.

பின்னர்,

“வார விடுமுறை நாட்களில் நீங்கள் என்னென்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்.

ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் செய்தவற்றைத் தங்கள் மழலை மொழியில் அழகாகச் சொல்லத் தொடங்கினார்கள்.

ஒரு குழந்தை பூங்காவிற்குச் சென்றதாகக் கூறியது.

மற்றொரு குழந்தை தாத்தா, பாட்டி வீட்டிற்குச் சென்றதாகச் சொன்னது.

இன்னொரு குழந்தை அம்மாவுடன் விளையாடியதாக மகிழ்ச்சியுடன் கூறியது.

ஆனால், நித்தீஷ் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவனது முகத்தில் வழமையான புன்னகை இல்லை.

இதைக் கவனித்த ஆசிரியை அவனருகில் சென்றார்.

மெல்ல அவனது தலையைத் தடவியபடி,

“என்ன நித்தீஷ் !இன்றைக்கு உங்கள் முகம் ஏன் வாடியிருக்கிறது? என்ன நடந்தது? உன்னுடைய அழகான சிரிப்பைக் காணவில்லையே!” என்று அன்புடன் கேட்டார்.

நித்தீஷ் கவலையுடன் பேசத் தொடங்கினான்.

“ரீச்சர்! இன்றைக்கு நான் அப்பாவோடுதான் பள்ளிக்கு வந்தேன். அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு வரவில்லை!”

“ஏன்  என்ன ஆச்சு ?அம்மாவுக்கு என்ன நடந்தது?”

“அம்மாவுக்குக் காய்ச்சல், ரீச்சர்! அதனால் அம்மா வீட்டில் படுத்திருக்கிறாங்க. வேலைக்கும் போகவில்லை. சமைக்கவும் முடியவில்லை. என்னைப் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக்கொண்டு வரவும் முடியவில்லை.”

சிறிது நேரம் அமைதியாக இருந்த நித்தீஷ் மீண்டும் சொன்னான்.

“இன்றைக்குப் பள்ளிக்கூடம் முடிந்ததும் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு போகவும் வரமாட்டாங்க. அதுதான் எனக்குக் கவலையாக இருக்கு, ரீச்சர்!”

அவனது மழலை மொழியில் வெளிப்பட்ட தாய்ப்பாசத்தைக் கேட்டு ஆசிரியையின் உள்ளம் நெகிழ்ந்தது.

அவர் மெல்ல அவனது கன்னத்தை வருடினார்.

“நித்தீஷ். !அம்மாவும் பாவம்தானே! அம்மாவுக்குக் காய்ச்சல் வந்தால் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டுமல்லவா?”

நித்தீஷ் மெதுவாகத் தலையசைத்தான்.

“நீங்கள் இப்போது வளர்ந்த பிள்ளைதானே! அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டும். அம்மாவைக் கஷ்டப்படுத்தக் கூடாது.

அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பிள்ளையாக நடக்க வேண்டும். சரியா?”

“சரி, ரீச்சர்!” என்றான் நித்தீஷ்.

“அம்மா நன்றாக ஓய்வெடுத்தால் காய்ச்சல் குறைந்து மீண்டும் பழையபடி உங்களோடு விளையாடுவாங்க. பள்ளிக்கூடத்திற்கும் கூட்டிக்கொண்டு வருவா!

இதைக் கேட்ட நித்தீஷின் முகத்தில் மெல்லப் புன்னகை மலர்ந்தது.

“அப்படியா, ரீச்சர்?”

“ஆமாம் செல்லம் இப்போது நாங்கள் எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்து விளையாடப் போகிறோம். பாடப் போகிறோம். அதன் பிறகு கொஞ்சம் படிக்கப் போகிறோம். நீங்களும் எங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமல்லவா?”

“ஓம், ரீச்சர்! நானும் இப்ப சந்தோஷமா இருக்கிறேன். நீங்க சொன்னதெல்லாம் கேட்பேன். அம்மாவையும் கஷ்டப்படுத்த மாட்டேன்!”

என்று மகிழ்ச்சியுடன் கூறினான் நித்தீஷ்.

சற்றுமுன் வாடியிருந்த அந்தப் பிஞ்சு முகம் இப்போது மலர்ந்த பூவைப்போலப் பிரகாசித்தது.

ஆசிரியையும் மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக்கொண்டார்.

நித்தீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட ஓடினான்.

அவனது முகத்தில் மீண்டும் அழகான புன்னகை மலர்ந்திருந்தது!

🌸 தாயைத் தேடும் குழந்தையின் மனம் தவறானதல்ல!

தாயின் அன்பும் அரவணைப்பும் ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்திருக்கும்.

தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஓர் உன்னத உணர்வாகும்!

🌹 நன்றி! வணக்கம்! 🌹

✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து

உறவுகளின் அன்பான வார்த்தைகள்

வாழ்த்துகள் & கருத்துகள்

இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.

சிறுகதையைப் பகிரவும்

✦ FIRST AUDIO

வாழ்த்து கூற

மனிதர் சரிபார்ப்புகணக்கு தயாராகிறது…

வாழ்த்துகள் & கருத்துகள் 0

புதியவை முதலில்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to  

மேலும் · Mo

அங்கத்தவர்கள்Give