பீமாவும் மஞ்சள் இலைகளும்!!
🍂 பீமாவும் மஞ்சள் இலைகளும்!!
🌼 சிறுவர் சிறுகதை 🌼
அது ஓர் இலை உதிர்காலம்.
மரங்களில் இருந்த இலைகளெல்லாம் மஞ்சள் நிறமாகப் பழுத்து, நிலத்தில் உதிர்ந்து கொண்டிருந்தன.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் இலைகளின் அழகிய கோலம்!
அந்த இலைகளுக்குள் ஓடிச்சென்று விளையாடுவதென்றால் பீமாவிற்கு அலாதிப் பிரியம்.
பீமா ஐந்து வயதுச் சிறுவன். அவன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று, காலை பதினொரு மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடுவான்.
அன்றும் வழக்கம்போல் அம்மாவின் கையைப் பிடித்தபடி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.
அப்போது நிலத்தில் பரவிக் கிடந்த மஞ்சள் இலைகள் அவனது கண்களைக் கவர்ந்தன.
“அம்மா! அம்மா! கொஞ்ச நேரம் இங்கே விளையாடலாமா?” என்று ஆசையோடு கேட்டான்.
“தம்பி! அம்மா வீட்டிற்குப் போய்ச் சமைக்க வேண்டும். சரி, கொஞ்ச நேரம் மட்டும் விளையாடுங்கள். நான் இந்த வாங்கில் அமர்ந்திருக்கிறேன்.”
“சரி அம்மா! நான் கொஞ்சம் அழகான இலைகளைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன்.”
“தம்பி! இலைகளுக்குள் குப்பைகள், அழுக்குகள் எல்லாம் இருக்கும். கவனமாகப் பார்த்து விளையாடுங்கள்!” என்று அம்மா எச்சரித்தார்.
பீமா மகிழ்ச்சியோடு ஓடினான்.
மஞ்சள் இலைகளை அள்ளுவதும், குவிப்பதும், அவற்றுக்குள் குதித்து விளையாடுவதுமாக இருந்தான்.
அழகான இலைகளைத் தேடிச் சேகரித்தான்.
அவனது சின்னஞ்சிறு இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது.
அப்போது அவனது கண்களில் ஒரு பொருள் தென்பட்டது.
அது இறந்துபோன நத்தையொன்றின் ஓடு!
“அம்மா! அம்மா! இங்கே வாங்கோ! இது என்ன? இதைக் கையால் தொடலாமா?” என்று கேட்டான்.
அம்மா அருகில் வந்து பார்த்தார்.
“தம்பி! இது ஒரு நத்தையின் ஓடு. இதற்குள் வாழ்ந்த நத்தை இறந்துவிட்டது. பாவம்! அதன் ஓடு மட்டும் இங்கே கிடக்கிறது.”
பீமா ஆச்சரியத்துடன் கேட்டான்.
“அம்மா! நத்தை இறந்த பிறகு அதன் ஓடு மட்டும் மிஞ்சியிருக்குமா? அப்படியானால் அதன் உடம்பு எங்கே போனது?”
“தம்பி! நத்தை இறந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அதன் உடம்பு மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்டது.”
அம்மாவின் பதிலைக் கேட்டதும் பீமாவின் முகம் வாடியது.
சற்று நேரத்திற்கு முன்பு மகிழ்ச்சியில் துள்ளிய அவனது விழிகளில் கவலை படர்ந்தது.
“அம்மா! அந்த நத்தை பாவம்தானே? அதுவும் ஒருநாள் இந்த இலைகளுக்குள் விளையாடியிருக்கும்தானே?”
அம்மா அவனை அன்போடு அணைத்துக்கொண்டார்.
“ஆமாம் தம்பி! எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவற்றையும் நாம் அன்போடு நேசிக்க வேண்டும்.”
பீமா சிறிது நேரம் அமைதியாக நின்றான்.
பின்னர் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு,
“அம்மா! விளையாடியது போதும். வீட்டிற்குப் போவோம். எனக்கு அந்த நத்தையை நினைக்கக் கவலையாக இருக்கிறது!” என்றான்.
சிறிது தூரம் நடந்தவன் மீண்டும் திரும்பிப் பார்த்தான்.
“அம்மா! அந்த நத்தையின் ஓட்டை நான் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வரலாமா?”
“வேண்டாம் தம்பி! அது இங்கேயே இருக்கட்டும். நாம் அதைத் தொடாமல் விட்டுவிடுவோம்.”
அம்மா அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
பீமாவின் முகத்தில் இன்னும் கவலை படர்ந்திருந்தது.
மஞ்சள் இலைகளின் அழகில் மகிழ்ந்த அவனது சின்னஞ்சிறு இதயம், ஒரு நத்தையின் இறப்பைக் கேட்டு வாடிப்போனது.
இறப்பு என்ற சொல்லின் பொருளை முழுமையாக அறியாத குழந்தையின் மனத்தில்கூட, ஓர் உயிரின் இழப்பு ஆழமான கவலையை ஏற்படுத்திவிடுகிறது.
அன்று பீமா மஞ்சள் இலைகளை மட்டுமல்ல, உயிர்களின் மீது அன்பு கொள்ளும் ஒரு புதிய உணர்வையும் தன்னோடு எடுத்துச் சென்றான்.
🌷 கதையின் கருத்து
உயிர்களின் மதிப்பை உணரும் குழந்தை உள்ளத்தில் கருணையும் அன்பும் இயல்பாக மலர்கின்றன.
🌹 நன்றி! வணக்கம்! 🌹
✍️ சிவதர்சனி இராகவன்
🇨🇭 சுவிட்சர்லாந்து
வாழ்த்துகள் & கருத்துகள்
இந்தக் கதை குறித்த உங்கள் எண்ணங்களையும் வாழ்த்துகளையும் பகிருங்கள்.
