அறிவின் விருட்சம்
“அறிவின் விருட்சம்”
சக்தி சக்திதாசன்
உள்ளதைச் சொல்லிவிடு – இல்லையேல்
தள்ளியே நின்றுவிடு
நல்லதைச் செய்துவிடு – இல்லையேல்
நயமாய் விலகிவிடு
இன்பத்தை விதைத்துவிடு – இல்லையேல்
இல்லாது சென்றுவிடு
துன்பத்தைத் துடைத்துவிடு – இல்லையேல்
தூரத்தே விலகிவிடு
நேசத்தை வளர்த்துவிடு – இல்லையேல்
நெஞ்சத்தை மறைத்துவிடு
பஞ்சத்தை அழித்துவிடு – இல்லையேல்
பசிப்பையே புசித்துவிடு
அச்சத்தை எரித்துவிடு – இல்லையேல்
ஆயுளை முடித்துவிடு
தாகத்தைத் தணித்துவிடு – இல்லையேல்
தணலாய்த் தகித்துவிடு
மனிதனாய் வாழவிடு – இல்லையேல்
மனிதத்தைத் மறந்துவிடு
மன்னிக்கக் கற்றுக்கொடு – இல்லையேல்
மாண்பினில் தாழ்ந்துவிடு
உண்மையைப் பேசிவிடு – இல்லையேல்
உள்ளத்தை மயக்கிவிடு
கண்டதைச் சொல்லிவிடு – இல்லையேல்
கண்களை இழந்துவிடு
உன்னையே அறிந்துவிடு – இல்லையேல்
உணர்வினில் மூழ்கிவிடு
ஆன்மாவை புரிந்துவிடு – இல்லையேல்
அறிவினைத் துறந்துவிடு
சக்தி சக்திதாசன்
