புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா.
தலைப்பு:- குழலோசை
அழகாய் ஆயன் அளிக்கும் கானம்
அதுதான் அமிர்தம் அன்றும் இன்றும்
பழகும் பாவில் பரவும் ஓசை
பகிர்வான் பார்த்தன் பாசம் குழைத்தே
கழங்கம் இல்லாக் கண்ணன் கீதம்
கருணை மழைதான் காற்றில் தங்கும்
குழலின் இனிமை குவிக்கும் சேதி
கூவும் நாதக் குறிதான் நீதி!
வேதம் வணங்கும் வேங்க டராமா
வென்றாய் போரில் வேய்ங்கு ழலாலே
நாதம் உனக்குள் நகர்வ தனாலே
நலியா உலகும் நகர்வ துகண்டோம்
பாதம் பணிந்தோம் பாகன் நீயே
பாதம் வைப்பாய் பரிவாய்த் தலையில்
சீதம் குழலின் நாதம் தானே
சிரித்தால் ஓசை சிந்தும் தேனே!
கண்ணன் குழல்தான் காதில் இன்பம்
கவனம் முழுதும் கலியின் துன்பம்
விண்ணை அளந்த விந்தை மாயன்
வெல்லும் சொல்லை வேண்டும் தூயன்
மண்ணை மறுக்கா மனிதர் மனத்துள்
மாயன் இசைதான் மனத்தை அடக்கும்
பெண்ணைப் போற்றும் பெம்மான் வந்தாள்
பெய்யும் இசையின் பொலிவால் எமையாள்
மூங்கிற் குழலுள் முகிழ்க்கும் ஒலியில்
முகுந்தன் இணைப்பான் முற்றும் வசமே
தேங்கும் வினையின் தேறா மனிதர்
தேம்பும் கணத்தில் தெய்வம் இசையே
தாங்கும் கண்ணன் தவிர்ப்பான் வினைகள்
தளிர்க்கும் அருளாற் றருவான் நலங்கள்
ஏங்கும் மனிதா எதற்கும் கண்ணன்
ஏந்தும் குழலின் இசைதான் வரமே!
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
