புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
நாதன் கந்தையா
இரண்டாயிரத்து நான்கு
பூமி அதிர்வும்
ஆழிப்பேரலையும் வந்து
ஊரை சுடுகாடாக்கி
மானுடத்தை
மண்ணுள் புதைத்தபோது
ஊருக்குள்
கோவில் ஒன்று மட்டும் தப்பிருந்தது.
கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா
அப்பாவுக்கு கடவுள்மீது
கடும் கோபம்.
அம்மா சொன்னாள்
கடவுள் என்ன செய்ய?
நடந்ததுது இயற்கை அனர்த்தம்
பிரளயம் என்று,
இரண்டாயிரத்து ஒன்பது
இனப்படுகொலையின் இறுதி கட்டம்
மக்களின் தவிப்பு…
எண்ணற்ற சாவுகள்….
விமான குண்டு வீச்சில்
பல கோவில்களும்
தரை மட்டமாகியிருந்தன.
தாய்மார்கள்
மண் அள்ளி திட்டிக்கொண்டனர்
கடவுளையும் சேர்த்து.
ஏனோ தெரியவில்லலை
எனக்கு கடவுள்மேல் கோபம் வரவில்லை.
அம்மாவை காணவில்லை….
கோவிலுக்குள் இருந்த சாமிகளுடன்
அம்மாவும் இடம் பெயர்ந்து
போயிருப்பாள் என்று நினைத்தேன்.
ஏனென்று தெரியவில்லை
அம்மா சொன்ன பிரளயம் மட்டும்
எனக்கு பளிச்சென்று
ஞாபகத்துக்கு வந்தது.
என் மனைவி கடவுளை திட்டினாள்.
கோவிலுக்குள் கடவுள்
இருந்தால்த்தானே
அவளின் திட்டு பலிப்பதற்கு.
ஆண்டுகள் பல ஓடிவிட்டன.
இன்று மக்களின் நிலையை பார்த்தவுடன்
அன்று அப்பா கடவுள்மீது
கோபித்துக்கொண்டதுபோல
எனக்கு கடவுள்மீது
அதிக வெறுப்பும் கோபமும் வருகிறது,
கற்பனை புனைவாக இருக்கலாம்
கேள்வி ஞானமாகவும் இருக்கலாம்
“கடவுள் காப்பார்”
“கடவுள் தண்டிப்பார்”
என்பவை எல்லாம்
ஒரு வாய்ப்பாட்டு
அல்லது வாய்ப்பாடு
என்றுமட்டும் எண்ணத் தோன்றுகிறது.
-நாதன் கந்தையா-
