எங்கே அந்த வாழ்க்கை

ஜெயம் தங்கராஜா

கவி 729

எங்கே அந்த வாழ்க்கை

எங்கேதான் போனது அந்த புன்சிரிப்பு
இங்கேதான் நடக்கிறது உண்மையான தப்பு
மகிழ்ச்சியை தரவில்லையா ஓடியொடியும் உழைப்பு
அப்படியாயின் எதற்காகத்தானோ வீணான பிழைப்பு

வாழ்க்கையை விட்டுவிட்டு ஓடிப்போனதென்ன கலகலப்பு
மறக்கலாமோ ஒருதரந்தான் கிடைத்ததிந்த வாய்ப்பு
குறைந்தளவு காலமே மண்ணுலகின் இருப்பு
ஆயுளோ தேய்கின்றது எப்போதுதான் அனுபவிப்பு

நேரமில்லையென்று சொல்லி வாழ்க்கையினை சித்தரிப்பு
போதாது போதாதென்று ஆசையினால் அந்தரிப்பு
கதைப்பதும் சிறுத்து மறந்தது சிரிப்பு
கிடைத்த கணங்களிலெல்லாம் மறுக்கப்பட்டதே பூரிப்பு

கடைசியில் எல்லாம் பார்க்கலாமென தவிர்ப்பு
நினைத்ததந்த நேரம்வர ஆரோக்கியத்தில் இழப்பு
சாய்ந்துகொள்ள தோள்தராத சொந்தங்களால் தவிப்பு
தேடவேண்டியதை தேடாததால் தேடியதிந்த உத்தரிப்பு

காலம் கடந்தபின்பு வாழ்க்கைக்கு அழைப்பு
நரைதிரை விழுந்து கோலத்திலுமில்லை வனப்பு
விட்டுப்போன நிலையில் உடலிலுள்ள சுறுசுறுப்பு
எப்படித்தான் நிகழ்ந்து நிறைவேறிடும் விருப்பு

ரெக்கையின்றி எட்டுத்திக்கும் அந்தக்காலம் பறப்பு
முன்றுகாலில் இந்தக்கால வாழ்க்கையதன் நடப்பு
வாழ்க்கையில் பாதிக்குமேல் இரசிக்காமல் கழிப்பு
மீதியிலே சிக்கிக்கொண்டு திருதிருவென முழிப்பு

ஜெயம்
12-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading