தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
பால தேவகஜன்
பங்குனி
பண்ணாகம் விசவர்த்தனை
பதியுறையும் வேலையா!
உன்னை கொண்டாடி மகிழ்கின்ற
பங்குனியும் வருகுதையா!
அங்கு நீ! இங்கு நான்
ஆனதே என் கவலை
எப்போது உன் அழகை
அருகிருந்து பார்ப்பேனோ
ஆறு மனம் ஆற்றிடவே
ஆறு முகன் வருகின்றான்
ஆறு படை வீடுடையான்
அகிலம் காக்க வருகிறான்.
கூறுமடியார் குறைதீர்க்க
குமரனவன் வருகின்றான்
கொள்ளை அழகு கொண்டிங்கே
குணநிதியான் வருகின்றான்.
வண்ண மயில் மேலமர்ந்து
வடிவேலன் வருகின்றான்
எம் எண்ணமதை ஈடேற்ற
வேலேந்தி வருகின்றான்.
உலக பெருமயிலில் மீதமர்ந்து
உமையான் மகன் வருகின்றான்
விடலைகள் தோளமர்ந்து
வினைதீர்க்க வருகின்றான்.
நான் அருகிருந்த காலங்களை
கண்ணனைக்க வைக்கின்றான்
நான்விலகிவந்த காலங்களை
வேதனைக்குள் புதைக்கின்றான்.
வேட்டிகட்டி நான் போன
திருவிழாவும் இதுதானே
விடிய விடிய கொண்டாடிய
பெருவிழாவும் இதுதானே.
ஊரெல்லாம் காசு சேர்த்து
ஊர் வியக்க விழாசெய்து
எம் பருவங்களின் பலம்காட்டிய
திருவிழாவும் இதுதானே.
எட்டாம் திருவிழாவுக்காய்
எத்தனை நாள் காத்திருப்போம்
அத்தனை இன்பம் தரும்
உச்சமான திருவிழாவும் இதுதானே.
உடனிருந்து உனை சுமக்க
மனமிருந்து தவிக்குதையா!
புலம்பெயர்ந்த தேசத்தில்
புலம்பியே வாழ்வு போகுதையா!
குறைதீர்க்கும் கந்தையா!
மறுமுறை என்னையும் அழையையா!
நிறைவுகளின்றிய நிகழ்காலமதை
நிறைவுகளாய் ஆக்கி தாருமையா!
