அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 183
02/08/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“கங்குல் முதல் காரிருள் வரை”
——————————————-
இருண்டு செல்கிற நேரமது!
இரண்டும் கெட்டான் வேளையது!
கரந்து வாழும் கோட்டான்களும்
கண் விழிக்கும் காலமது!
வரண்டு போன நிலத்தையுமே
வளம் கொழிக்க வைப்பவனின்
கரங்கள் ஓய்ந்து களைப்புடனே
கால்கள் பின்னி நடந்திடவே!
திரண்டு, வெளியில் இரைதேடும்
திறமிகு பல்வகைப் பறவைகளும்,
மிரண்டு போய் தம் சிறகடித்து
மீண்டும் இருப்பிடம் விரைந்திடுமே!
மருண்ட விழிசேர் மான்களுமே
மாலை யிட்ட மணாளருடன்
விரைந்து தம்வீடு ஏகிடுமே
வெயில் தந்த இளைப்புடனே!
திரண்ட ஒளிக் கதிர்களுமே
திரும்பக் கண்களை மூடிடுமே!
வெகுண்டு, வேளை வந்ததென
விரைந்து ஆதவன் மறைந்திடுமே!
இருண்ட வானும் ஒளிர்விடவே!
இனிய நிலவும் வெளிப்படவே!
அருண்டு விழித்த அல்லியுமே
அழகு முகத்தைக் காட்டிடுமே!
பருமன் கொண்ட அரக்கனென
பகலை விழுங்கி ஏப்பமிடும்
இரவும் உலகைச் சூழ்ந்திடவே
இயற்கையும் துயிலுடன் ஒன்றிடுமே!
நன்றி
மதிமகன்
