வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம் 53
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்
பக்குவம்
பத்திரி கையில் படம் போட்டு
பத்தரை மணிக்கென நாள் குறித்து
முத்திரையில்லா மடலொன்று
முந்தாநேத்து வந்ததப்பா.
புத்திரி வயது பத்தாச்சாம்
பக்குவப்பட்டு விட்டாளாம்
படம்பிடிப்போரை தேடுகிறோம்
தெரியுமா என்று கேட்டாராம்.
பாட்டிக்கு வயசோ தொண்ணூறாம்
தாத்தாவோடு தகராறாம்
பக்குவமாகப் பேசியவரை
பக்கத்தில் நிற்க சொன்னராம்.
குளிக்கிற பெண்ணைப் பார்த்ததனால்
குடும்பக் கோட்டில் வழக்கு வைத்தார் – இப்போ
குடும்பத்தோடு குளியலறைக்குள்
குமரிக்கு நீராட்டு.
கொடுக்கல் வாங்கலைக் குறிவைத்து
நடத்தும் நாடகம் இதுவாச்சு.
கண்டறியயாத காட்சிகளிற்கு
கலாச்சாரமென்னும் பெயராச்சு.
அரைவேக்காட்டு முட்டையினை
ஆம்லட் என்கின்றோம்
அலரி;க்கொட்டையை அரைத்து வைத்து
அழகுக் களிம்பு என்போமா?
பக்குவம் என்பது பவ்வியமான
படைப்பின் கண்ணாடி
பழகிப்போன சடங்கினிற்கு
பரலைஸ் வராதோ தள்ளாடி….
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்
