சிவரஞ்சினி கலைச்செல்வன்

காணி
மாவை கந்தன் மகிமை பெற்ற ஊரில்
சீமெந்து தொழிற்சாலை
தெற்காக எம் காணி
உக்கிய உரம் இட்டு
உழுது பதப்படுத்தி
வெற்றிலை கொழுந்து நட்டு
விரைவாய் தளிர் விட்டு
பற்றி வளர என்று
முள் முருக தடி நட்டு
இராசவள்ளி முளை கிழங்கு
இடை இடையே தாட்டுவிட்டு
பச்சை செடி வளர்த்து
பணம் சேர்த்த காணி அது.
கடலாலே ஆமி வந்து
காப்பரனை அங்கமைத்து
விடுகின்ற ஷெல் அடியால்
விறகாகி போனதது
போர் ஓஞ்சு போச்சென்று
போய் பார்க்க காணிக்குள்
புத்தர் விகாரை ஒன்று
பூத்திருக்கு புதிதாக.
பிக்கு ஒருவருக்கு
பக்கத்தே ஆமி
பக்தரை காக்கும்
புத்தரை காக்கின்றார்
என் காணி எனக்காக
என் முருகன் அருள்வானோ?
சூரனை கொன்ற அவன்
மயிலேறி வருவானோ?
கொடியோரை கொல்ல.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading