புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ஜெயம் தங்கராஜா
கவி 659
வாழ்க்கையே எனை கைவிட்டுவிடாதே
இந்த ஒருமுறை வாழ்க்கையும் போதும்
சிந்தை சலிக்காது மகிழ்ச்சியை ஓதும்
வாழ்நாள் இன்னமும் வேண்டும் நிறவாக
ஏழ்மைக்குள்ளும் சுகங்கள் இருக்குமே மறைவாக
தினமும் படித்திடும் புதிய பாடங்கள்
கணக்கிலே இல்லை போடுகின்ற வேடங்கள்
வேலை வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றது
நாளை நிறைவாக்கி வெறுமையினை தடுக்கின்றது
நீளம் எவ்வளவு சரியாகத் தெரியவில்லை
காலம் மறைப்பினும் உவகையே எல்லை
கடினமாக வரும்போதெல்லாம் வலிமை பிறந்தது
அடித்தபின் அரவணைக்கும் வாழ்ககை சிறந்தது
உன்னதமான வாய்ப்பு பூலோகத்தில் ஒருதரம்
என்னதான் நிகழினும் அது பெருவரம்
தள்ளிவிட்டே சிலவேளை வேடிக்கை பார்த்தது
சொல்லி தவறினை அனுபவம் சேர்த்தது
நேற்றை பற்றி இல்லையொரு மயக்கம்
காற்றை வணங்குகின்றேன் தொடர்கின்றது இயக்கம்
முயற்ச்சி பட்டுப்போகாது முளைக்கும் எந்நாளும்
செயலை வேகமாக்கி நம்பிக்கையதும் நீளும்
கனவுகள் பலிக்கலாம் பலிக்காதும் விடலாம்
மனதின் ஆசைகள் வற்றாத கடலாம்
கடமை என்பதை உயிரெனக் கொண்டேன்
உடமை உறவென உள்ளூரக் கண்டேன்
புதிராக சிலநேரம் புரியாமல் இருக்கும்
எதிர்கால விருட்சத்தின் வேர்களைப் பெருக்கும்
ஆரோக்கியம் ஒன்றையே இதுவரை வேண்டுகின்றேன்
பாரோடு நட்போடு தீயவைகளைத் தாண்டுகின்றேன்
நல்லதெது கெட்டதெதுவென பட்டே கற்றுக்கொண்டேன்
உள்ளத்து துன்பங்கள் விலகுவதையும் கண்டேன்
விதிப்படி வந்திங்கு வாழ்ந்ததில் சந்தோசம்
மதிமீறும் தோல்விகளும் வெற்றிதனை பேசும்
நன்றிதனைக் கூறிவிட தேடுகின்றேன் ஆண்டவரை
என்றுமிந்த கூரையை தாங்கிநிற்கும் நடுச்சுவரை
ஜெயம்
25-06-2023
