சக்தி சக்திதாசன்

பரந்திருக்கும் வானத்தில்
குவிந்திருக்கும் கருமுகில்கள்
திறந்துவிடும் அணையதனை
பொழிந்துவிடும் அடைமழையாய்

நிறைந்திருக்கும் எண்ணங்கள்
நினைவுகளாய் இதயத்தில்
வடிந்துவிடும் கண்ணீராய்
சுமக்கமுடியா வேளைகளில

பிறக்கையிலே வருவதில்லை
இறக்கையிலே செல்வதில்லை
இடையில் மட்டுமேயிந்த
இடையற்ற சோதனைகள்

கைநிறைந்த செல்வங்கள்
கையோடு வருவதில்லை
நெஞ்சின் நினைவலைகள்
நெருப்பினிலே கருகிவிடும்

அழகழகாய்த் தத்துவங்கள்
அத்தனையும் வார்த்தைகளில்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
அவசரமாய் அர்த்தங்கள்

சிலநேரம் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சித்தத்திலே தெரிவதெல்லாம்
செயலாக்கம் பெறுவதில்லை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan