மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 184
09/08/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“தானே வரும் மிடுக்கு”
——————————-
மழையொன்று வந்துபோய்
மறுநாள் சிறு வெயிலில்…
குழைவான காட்சியொன்று
குளிரவித்தது என் கண்ணை!

செயல்வீரர் வரவேற்பில்
செங்கம்பளம் விரித்தது போல்…..
அயல்வீட்டு ரோஜாச் செடி
அருஞ் சிகப்பாய் பூத்ததுபோல்….

செந்தழல் துண்டொன்று
சிதறியே விட்டது போல்……
அந்தரத்தில் உலாவரும்
ஆதவனின் துகள்கள் போல்…..

மண்ணிறத் தட்டொன்றில்
மாணிக்கம் பதித்தது போல்….
செந்நிறக் குருதி யெங்கும்
சிந்திக் கிடந்தது போல்……..

அழகுமிகு அஞ்சுகத்தின்
அலகின் நிறத்தது போல்……..
பழகுதமிழ் புலவனவன்
பாரதியின் திலகம் போல்…….

பரம்பியிருந்த கூட்டத்தில்
இரந்து பெயர் கேட்டேன்.
எம் பெயர் “தம்பளப் பூச்சி”
என்றன அவை மிடுக்குடன்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading