வர்ண வர்ண பூக்களே!
வண்ண வண்ணப் பூக்கள்…..
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா!
சந்தம் சிந்தும் சந்திப்பு.
இயற்கை
“”””””””””
இயற்கையிங்கே சிரிக்கிறதா?
எங்களையும் பார்த்து
மயக்கநிலை மறையாதா?
மண்வளத்தைக் கண்டும்
அழகியலும் அரவணைப்பும்
அடிப்படையில் வைத்துப்
பழகிவந்த மரபனைத்தும்
பயனிலையே என்று
விளக்கமிலா மனிதனென
விரைவதெங்கே சொல்லு?
களங்கமிலா கடல்கூட
கழிவுகளை வாங்கி
வாழுமுயிர் அழிவதற்கே
வலுச்சேர்த்து நிற்கும்
பாழுமிந்தச் செய்கையிலே
பாவியென மனிதன்
பகற்கனவிற் தடம்மாறி
பலியெடுக்கும் எமனாய்
இகமெங்கும் பசுமையென
இளவெயில் இதத்தில்
விருந்தாடி மகிழ்ந்ததெலாம்
வியப்பெனவே ஆச்சு
அருபாடு பட்டவர்தம்
அருமைகளை எள்ளி
அணைக்கின்றாய் அயல்நாட்டு
அழகினையே அள்ளி
பிணைத்துள்ள இயற்கையினை
பிறருக்காய் அழித்துப்
பிறவியிலே பெரும்பாவம்
பெருக்காதே மூடா
அறவழியில் அனைத்தையுமே
காத்திடவும் வேண்டும்
அடுத்துவரும் தலைமுறைக்கே
அளித்திடவும் வேண்டும்
வரப்புயர என்றவளின்
வார்த்தைகளைத் தேடு
இரக்கமுடன் இயற்கைதனை
இயன்றவரை நாடு
மழையாகப் பொழிந்து
மலைகளிலே வீழ்ந்து
அழைக்கின்ற தாயை
அருவியெனச் சொல்லி
கருவியென நீயும்
கவினுறவே உழைப்பாய்
மருவுகின்ற தருவின்
மகிமையினை உணர்ந்து
மரங்களையும் நாட்டி
மழைபொழியச் செய்வாய்!
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
