பாலதேவகஜன்

எச்சத்து நிலையகற்றி
உச்சத்தில் எமையிருந்த
உலகே மெச்சும்
மாபெரும் விடுதலை போரை
வழிநடத்திய வீரத்தலைவா!
வழிமேல் விழிவைத்து
காத்து கிடக்கின்றோம்
உனது வருகைக்காக.

ஆசைகள் சுரந்த
எச்சத்தில் பிறந்தவனல்ல நீ!
விடுதலை சுரந்திட்ட
வீர மறவனாய் எமக்காக
பிறந்தவனே நீ!
சேர சோழ பாண்டியரின்
பரிணாம்மாய் பிறந்த
பெரும் தலைவனே நீ!

மழைபொழியும் கார்த்திகையில்
பார்வதியின் வயிற்றினிலே
துளிர்த்துவந்த நறுமுகை!
ஈழத்தாய் மண்ணிலே
மொட்டவிழ்ந்த நன்னாள்
நமக்கெல்லாம் பொன்னாள்.

கட்டவிழந்த காட்டாற்று
வெள்ளம் போல்
வற்றாத நின் புகழ்
வையகமுள்ளவரை வாழ்க.
வீரப்போர் புரிந்த
ஈழ மறவா!
புதுவிடியல் புலரும்
ஒரு பொன்நாளில்
நாவெல்லாம் நின்
மாண்பு பேச
காலமும் கர்வங்கொள்ள
கரிகாலா! நீ வாழ்க.

அறத்தின் வழி நின்று
இனத்தின் துயர்துடைக்கும்
விடுதலை போராட்டத்தை
சோரம் போகாமலும்
பேரம் பேசாமலும்
உறுதியோடு வழிநடத்திய
உன்னத தலைவா நீ! வாழ்க.

ஈழம் என்ற ஒரே இலக்கில்
இறுதிவரை களத்தில் நின்று
களமாடிய எங்கள் கரிகாலா!
சொல் அல்ல செயலெனும்
எங்கள் செயல்வீரா!
கரைக்குள் அடங்கா
கடலாய் விரியும்
நின் தீரம்! சொல்லி
அந்தமில்லா தமிழில்
புகழ்பாடி போற்றுகின்ற
தலைவா நீ! வாழ்க.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading