உன் எண்ணத்தின் வண்ணமே வாழ்வானது

உன் எண்ணத்தின் வண்ணமே வாழ்வானது

உன் செயலின்படியே வாழ்க்கை என்று
துன்பங்களுக்கு இடையிலும் வாய்ப்புக்கள் கண்டு
எண்ணங்களே அமைக்குமிந்த வாழ்க்கையின் நிகழ்வை
இன்னல்களைக் கடந்து அடையலாமே மகிழ்வை

எதுவும் சில காலம்தான் இங்கு
அதுவும் கடந்துபோகலாம் அங்கு
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று
கடந்திடின் வாழ்வை அமைதியும் உண்டு

உன்னை நீயே நன்கு அறிவாய்
இன்றே உணர்ந்து வெளியே வருவாய்
துணிந்தால் எதற்கும் வெற்றியே வரவாய்
மணித்துளி ஒவ்வொன்றும் பொன்னென அறிவாய்

துயரம் ஒருபோதும் ஏற்றிடாது உயரம்
தனிமை ஒருநாளும் தந்திடாது இனிமை
மனிதனின் வாழ்க்கையை அமைக்குமாம் விதி
இனி மாற்றியமைக்கட்டும் உன்னை உன்மதி

கொண்டாலே நம்பிக்கை சூழ்நிலை சாதகம்
உண்டாகி முன்னேற்றம் அனுதினமும் ஏறுமுகம்
இல்லாதவன் என்கின்ற சுமைகளை நீக்கலாம்
நல்லதொரு வாழ்க்கையை அனுபவித்துப் பார்க்கலாம்

சோதனைகள் உனக்கெனவே வந்துவந்து போகும்
வேதனையை தந்துவிட உள்ளமதும் நோகும்
மனம் எடுக்குமங்கு எதிர்மறையான முடிவு
குணத்தை மாற்றியமைக்காவிடின் வந்திடாது விடிவு

இந்த நிலை நிச்சயமாக மாறும்
சிந்தித்தால் அடைந்துவிடும் வாழ்க்கையதும் பேறும்
கண்டுபிடி உன்னைப்பற்றி மேலும் கண்டுபிடி
எண்ணங்களின் ஏற்றங்களே வாழ்க்கையின் ஏற்றப்படி

ஜெயம்
18-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading