வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
சக்தி சக்திதாசன்
கார்த்திகை தீபம் எரிகிறது
காலத்தின் மகிமை புரிகிறது
மலையின் சிகரம் ஒளிர்கிறது
மாயை அனைத்தும் அழிகிறது
திரியாய் எங்கள் ஆணவமே !
ஒளியாய் ஆண்டவன் அருள்மழையே !
தீபத்தின் ஜோதியில் சிந்தையினை
தீர்க்கமாய் பதித்திட ஆனந்தமே !
அண்ணாமலையார் அருள் வேண்டி
அடிவலம் செல்வோம் கிரிவலமாய்
முற்றும் முழுவதும் அவன்வசமே
முழுமுதற் கடவுளிடம் சரணடைந்தோம்
கார்த்திகைத் திங்களின் பிரகாசம்
காணும்வேளை கார்த்திகைத் தீபத்திலே
கருணைவடிவாம் ஈசனின் அருளை
காலமெல்லாம் பெற்றிட வாருங்கள்
இல்லை என்றொரு சொல்லை
இல்லாமல் செய்திடும் பரமசிவன்
தொல்லைகள் எல்லாம் அறுத்திடுவான்
தென்னாடுடைய சிவனொரு அருட்கடல்
பிரதோஷ நாயகன் அடிமுடிதேடி
பிரமனும், ஹரியும் ஓடிய தலமிது
உள்ளத்தின் தெளிவைத் தேடி
உண்ணாமுலையாள் அடி பணிவோம்
கார்த்திகைதீபம் வீசிடும் ஒளியில்
காண்போம் வாழ்வின் உண்மைகளை
நாளைய வாழ்க்கையின் நலனுக்காய்
நாமெல்லாம் நீலகண்டனை பணிந்திடுவோம்
சக்தி சக்திதாசன்
