அறிவின் விருட்சமே..
அறிவின் விருட்சம்
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 146
அம்மா ! அம்மா ! என்றே
நெஞ்சத்தின் ஓலம்
அணையாமல் என்றும்
அலறிடும் அனுதினமும்
மடிமீது தலைசாய்த்து
மனம் கொஞ்சம் ஆறும்
மண்மீது தெய்வமாய்க்
கண் முன்னே தாய் தானே !
தன் கருவில் சுமக்கையில்
தாயன்று அறிவதில்லை
தன்மடிமீது தவழ்வதன்
தரமன்று உணர்வதில்லை
அரசனாய் உயர்ந்தாலும்
ஆண்டியாய் அலைந்தாலும்
அன்னைக்கது சேய்தானே
அவளுக்கில்லை வேற்றுமைகள்
நல்லூரின் மண்தனிலே
நானன்று தவழ்ந்திருந்தேன்
நெஞ்சிலே சுமந்தென்னை
நாளெல்லாம் காத்த அன்னை
சுவரில்லாச் சித்திரங்களை
சிந்தையிலே வரைந்திருப்பாள்
வர்ணம் தீட்டிடுவேன் எனவே
வானவில்லைச் சுமந்திருப்பாள்
மழைமேகம் கலைந்ததுமே
வானவில்லும் மறைவது போல்
அன்னை கண்ட கனவறியேன்
அரசனுமில்லை ஆண்டியுமில்லை
தமிழன்னை வடிவாக அம்மாவை
தமிழ் செய்து மகிழ்ந்திருப்பேன்
கவிசெய்யும் பொழுதெல்லாம்
கைவிரலில் அன்னை தவழ்ந்திடுவாள்
சிந்தையெனும் வனத்தினிலே
சிறப்புமிக்கு மலராக அன்னையவளே !
நிச்சயமற்ற வாழ்க்கை மண்ணிலே
நிச்சயமான ஒன்று உண்டெனில்
எள்ளளவும் பேதம் கிடையாத
எளிமையான தாயன்பு ஒன்றேதான்
சக்தி சக்திதாசன்
