வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம் 53
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
அண்ணா வணக்கம்,
தலைப்பு – விடியல்
“”””””””””
விடியல் வருமா எப்போது?
விந்தை உலகில் தற்போது
மடியும் உயிர்க்குள் முப்போதும்
மனத்தில் சோகம் தப்பாது
கடினப் பாதை சமைத்தவரும்
கற்கள் தடுக்க விழுகின்றார்
அடிமை வாழ்க்கை ஆர்வத்தில்
அலையும் வாழ்வும் வாழ்வாமோ!
படிகள் பலவும் கடந்தாலும்
பதிவுகள் எல்லை கடந்தாலும்
அடிகள் எத்தனை பெற்றாலும்
அவதிப் பட்டே அழிந்தாலும்
மடியப் பள்ளம் பறித்துவிட்டு
மாற்றம் எப்போ வருமென்றே
விடியல் கேட்டு ஏங்குகின்ற
விநோதம் மனித உயிர்க்குடைமை
முடிவில் உலகம் இதுவென்றும்
முற்றும் அறிந்தவன் தானென்றும்
நெடிதாய்ப் பயணம் செய்வதற்கே
நெய்யாய் உருகி உழைக்கின்றான்
துடியாய்த் துடிக்கும் பிறர்கண்ணீர்
துழைக்காக் கோட்டை அமைக்கின்றான்
நடிப்பில் உலகை வென்றவனாய்
நன்றாய் விடியல் நயக்கின்றான்!
விடிவை நோக்கிப் பயணிக்க
விரும்பம் உண்டு யாவர்க்கும்
விடியல் எதற்கு வரவேண்டும்
விகற்பம் இல்லாப் பதில்வேண்டும்
விடியாப் பெண்கள் வாழ்விற்கா?
விகிதா சார முறைமைக்கா
அடிமேல் அடிக்கும் அயலார்தம்
அடக்கும் கொள்கை விருப்புக்கா
விடியல் உண்மை உணர்விற்கா
வீழ்த்தும் கயவர் கருத்துக்கா
கடிதாம் கல்வி முறைமைக்கா
காட்டும் இயற்கை அழிவிற்கா
முடிவே இல்லாப் போட்டிகளால்
முற்றும் அழிப்பார் முயற்சிக்கா
செடிபோல் ஆலம் விழுதைப்போல்
செழிக்கும் வீணர் உளத்திலுமா?
படியா மனங்கள் பாழ்பட்டுப்
பசுமை காட்டா தயர்ந்தேகும்
இடிபோற் சொற்கள் இனிமையென
இன்றும் புகழ்வர் இயல்புண்டு
வடிக்கும் கண்ணீர் அழகியலாய்
வார்க்கும் புதுமை உலகினர்க்கு
விடியல் வருமா என்றேங்கி
வியப்பில் உரைத்தால் என்சொல்வேன்?
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
20/03/2023.
