கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
ஜெயம் தங்கராஜா
Kavi 634
போதையின் பாதையின் வாதை
அடிமுதல் நுனிவரை ஆடுது உலகம்
குடித்திடும் மாந்தரால் குடிக்குள்ளே கலகம்
எடுத்துமே சொன்னாலும் ஆயிரம் விளக்கம்
அடிமையானோர் அடிமையாக மயக்கத்தின் பழக்கம்
புத்தியைக் கெடுத்து மரியாதை கெடுக்குமது
சிந்தையை சிறைப்படுத்தி வாழ்க்கையை சீரழிக்குமது
சத்தியத்தைச் செய்துவிட்டு தப்பைச் செய்யுமது
சொத்தை அழிக்கவைத்து ஓட்டாண்டி ஆக்கிவிடுமது
குடிப்பவருக்கே தெரியாது வாழ்க்கையைக் குடிக்கும்
குடிபெயரா பழக்கமாகி காலத்திற்கும் பிடிக்கும்
படிப்படியாய் கரைந்துகொண்டு கல்லீரலும் துடிக்கும்
முடியாத நிலைதள்ளி மரணத்தில் முடிக்கும்
உழைக்கும் ஒருநாள் கூலியைக் கொண்டு
அழையா விருந்ததாம் மதுவினை உண்டு
களைப்பை போக்கிடும் ஒளடதம் என்று
பிழைப்பது தொடரலாமா நிம்மதியைக் கொன்று
கசந்த திரவத்தைக் குடித்து மயங்குவது
நிசத்தை புரிந்துகொண்டால் தீரும் மயக்கமது
உசத்தியாக நினைக்குமது விஷத்திற்கு சமமானது
வசப்படுத்திய குடிவிட்டால் கூடாதோ சுகமானது
ஊர் உலகிற்கெல்லாம் காட்சிப் பொருளாகி
பார்ப்பவர் கண்களிற்கெல்லாம் இவர் கோமாளி
சேர்ப்பார்களில்லை தெரு நாய்களிற்கு பங்காளி
யாரிவரோ பூமிவிட்டு சீக்கிரமாயிவர் காலி
குடும்பம் மனைவி குழந்தைகுட்டிகள் இங்கே
நடுரோட்டில் குடும்பத்தலைவன் குடிமகனாக அங்கே
தடுமாறி தள்ளாடியபடியே தந்தையவர் அங்கே
கொடுமையிது தனயனுக்கும் வரலாமோ இங்கே
அஞ்சாது துணிந்து அயலட்டம் மறந்து
கஞ்சாவைப் புகைத்து சிறகின்றிப் பறந்து
பிஞ்சிலே பழுத்து விடுகாலியாய்த் திரிந்து
கொஞ்சியவரையும் தள்ளி வாழ்க்கையில் பிரிந்து
அளவுகடந்தே போதைப்பொருட்கள் உலவும் தேசமிது
பழகவைத்து சீர்குலைத்தே செய்யும் நாசமிது
களவு வன்கொடுமைகள் பண்பை கேள்விக்குறியாக்குமிது
இளையவர் பாதையில் போதைப்பழக்கம் தப்பாயது
அடுத்த சந்ததியையும் சீரழிக்கும் போதைகலாச்சாரம்
தடுத்ததை நிறுத்தும் பொறுப்பு எமைச்சாரும்
கெடுத்திட வைக்காது எம்மினப் பேரும்
எடுத்துச் சொல்லிடுவோம் போகாது தொலைதூரம்
ஜெயம் தங்கராஜா
14-12-2022
