Jeya Nadesan May Thienam-222
மே தினமே மேதினியில் (712)
ஜெயம் தங்கராஜா
கவி 646
மாசில்லா உலகம் படைப்போம்
பாதியில் வந்த வேதியலால்
ஆதியின் தன்மையில் மாற்றம்
இயற்கையை விட்டு விலகி
செயற்கைக்கு உட்பட்ட வாழ்வு
தொழிற்திறன் கூடிய தொழிற்சாலைகள்
கழிவுகள் வாய்க்காலை நிரப்பின
பாவம் செய்ததோ ஏரிகள்
சாபமிது களங்கப்பட்டன நீர்நிலைகள்
தூசுகள் காவிய வளி
மாசுபட்டுக்கொண்டது பூமி
தாய்மையை கொண்டாடும் எவரும்
தூய்மையை பின்பற்ற வேண்டும்
குப்பைகளால் நிறைகின்றது அவனி
உப்பிட்டதிற்கு செய்யும் துரோகம்
கணக்கில்லா உயிர்களின் சொத்து
உனக்கென்றும் எனக்கென்றும் இல்லை
பயிர்களைப் பற்றி சிந்திக்கவில்லை
உயிர்களின் பக்கமும் அக்கறையில்லை
பெருகிவிடும் ஆபத்தை அறியவில்லை
அருகிவரும் வளங்களையும் உணரவில்லை
உற்பத்தி நிலையங்களின் அதிகரிப்பு
சுற்றுச்சூழலில் ஏனோ ஆர்வமில்லை
காற்றில் கரியமலவாயுவின் ஆக்கிரமிப்பு
ஆற்றில் திரவக்கழிவுகளின் ஆதிக்கம்
சுற்றம் கழிவால் திணிப்பு
தொற்றுநோயின் உற்பத்திசாலையாய் காசினி
குடிக்கும் நீரும் குறைகின்றது
பிடிப்பு இல்லை அதைப்பற்றி
சிந்திக்கா விட்டால் இப்போதே
சந்ததியும் பின்னர் கலங்குமன்றோ
புனிதமான பூலோகம் அமைப்போம்
மனிதத்தோடு வலம் வருவோம்
ஜெயம்
29-03-2023
