கணப்பொழுதில்
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
இதுதான் தற்காலம்
ஏய்ப்பவன் ஊரை உல்லாசமாக வாழுகின்றான்
என்றும் பாவத்திற்கு பயந்ததில்லை
மாய்ந்து விட்டது மனித நேயம்
மனச்சாட்சியும் மரணமடைந்து விட்டது
வாய்மையை இறுக்கமாக கடைப்பிடித்த அரிச்சந்திரர்கள்
வாழ வழியின்றியே நடுத்தெருவில்
தேய்பவன் ஓடாய் பசியில் உழல்கின்றான்
தொடங்கிய இடத்திலே நிற்கின்றான்
நேர்மை என்பது பிரயோசனமற்ற ஒன்றாக
நடிப்பதே வாடிக்கையான நிகழ்வாக
யார் எவர் எப்படிப்பட்டவர் தெரியாது
யோக்கியனாக கசிந்து உருகுவார்கள்
பார்வையோ பணத்தின் மேலே இருக்கும்
பக்குவமாக வேண்டியதைக் கறப்பார்கள்
தேர்ச்சி பெற்ற சுயநல வியாபாரிகள்
தோற்றவர்கள் இங்கே பாமரர்கள்
ஒழுக்கக்கேடு என்பது அதிகாரத்தில் சகஜம்
ஓதுமே சாத்தானும் வேதம்
பழுதான குணத்தால் பாதைகள் மாறுகின்றன
பாழாய்ப் போகின்றது சமுதாயம்
சிலுவைப்பாட்டுடன் வறியவர் நாட்கள்
சதிகளை புரியாத கூட்டமாக
கழுவி இவர்கள் மூளையை இன்னும்
கோட்டையைக் கட்டுகின்றது ஆதிக்கம்
புரியாத புதிராகவே வாழ்க்கை பயணிக்கின்றது
பகட்டும் பணமும் ஆட்சியிலே
அறிவு அண்றாடங் காய்ச்சிகளிற்கு எட்டவில்லை
அடிமட்டத்தில் எங்கோ கோளாறு
குறிவைத்து பறிப்பவரோ பறித்துக்கொண்டே இருக்கின்றனர்
கெடுத்தபடி வாளும் வரை
தடுத்துவிடும் சட்டம் ஒன்று இல்லை
தடியெடுத்தவன் சண்டைக்காரன் இங்கே
இனிய பழக்கங்கள் வாழ்க்கையில் சுவாசமிழந்துவிட்டன
இனி வாழ்க்கை இப்படித்தான்
கனிந்து தானாய் விழ முன்பே
காயை பறித்தே சுவைத்திடுவார்
குனிகின்ற சமுதாயம் வேண்டியே குட்டை
காட்டாது வலியை இருக்குமட்டும்
துணிவார்கள் மனம் கரையா செருக்கர்கள்
தணியாது அவர்கள் தீமைகள்
ஜெயம்
04-04-2023
