புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ஜெயம் தங்கராஜா
கவி 648
சித்திரை வந்தாலே
சித்திரை வந்தாலே வசந்தத்தின் அறிமுகம்
சிந்தையும் இனம்புரியாதே மகிழும்
முத்திரை பதிக்கும் இளவேனில் காலம்
மண்ணகம் பசுமையைத் தாங்கும்
புத்தாண்டை இந்த மாதமே பிரசவிக்க
பரவசத்துள் இதயமும் மிதக்கும்
புத்துணர்சி பிறந்து புலம்பலும் அகல
பிரமாதமாய் வாழ்க்கை இருக்கும்
கண்ணுபடுளவிற்கு பூக்களும் கோலங்களைக் கொள்ளும்
காணாத அழகும் தெரியும்
தன்னிலை மறந்து தேனீக்கள் கூட்டம்
தேனுண்டு மயங்கித் தள்ளாடும்
புன்னகை பூத்தபடி உயிர்த்திடும் இயற்கை
பொன்னென பொழுதினை மாற்றும்
வண்ணங்களைத் தீட்டும் கலைஞனாய் சித்திரை
வர்ணிக்க வார்த்தைகள் வேண்டும்
வாராயோ வாராயோ சித்திரையே இத்தரைக்கு
வன்மங்களை தகர்க்கும் ஜென்மமாக
தாராயோ தாராயோ வளமான வாழ்வை
துன்பத்தைக் குறைக்கும் இறையாக
தீராத பிணியெல்லாம் தீர்ந்துவிடும் என்றெண்ணி
தீர்வுதரும் திக்களாய் எண்ணுகின்றார்
சீராய் அனைத்தையும் சரிசெய்ய வருவாயே
சீவியத்தை சீர்படுத்தி தருவாயே
வாங்கியே மறுபிறப்பை மரங்களும் துளிர்த்தன
வான், வெளிச்சத்தை வழங்கிவிட
தூங்கியோ கிடந்தன பறவைகள் விலங்குகள்
தாண்டியே இருப்பிடம் வெளிவந்தன
நீங்கிக் கொண்டதால் குளிரும் பனியும்
நாணலும் வெட்கத்தை நீக்கியதே
ஊக்கத்தைத் தந்திடும் பன்னிரெண்டில் ஒன்று
உள்ளங்கள் கொண்டாடும் இதுவென்று
ஜெயம்
12-04-2023
