மே தினமே மேதினியில் (712)
அறிவின் விருட்சம்
திருமதி. செ. தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம்.
சந்தம் சிந்தும் சந்திப்பு-220
நடிப்பு
“”””””””
விளம் விளம் விளம் மா
நாடக மேடையில் நடிகரென் றானோம்
நன்நெறிப் போர்வையில் நரிகளை வென்றோம்
கூடக ஒப்பனை கொடுத்தவன் முன்னே
கொள்கையில் போதனை கொடுத்திட லானோம்
ஆடகன் ஆட்டிடும் அலைகளில் ஆடி
அன்பினை மேவிடா அகத்தினைக் கொண்டோம்
பாடகன் பட்டினத் தடிகளைப் போலே
பாவனை செய்துநாம் பகட்டினில் வாழ்ந்தோம்
வேடமென் றறிகையில் வென்றிடும் காலம்
வேதனை யாலுயிர் வெந்தழ லாகும்
ஊடக மெமதுடல் உரமிலா ஞானம்
உய்வழி யறிந்திடா(து) உயிரொரு கானம்
ஏடதன் நிறைமொழி ஏற்றுரை சொல்லி
ஏய்ப்பது நன்றென எண்ணமும் கொண்டோம்
மாடமும் குடிசையும் மண்ணினில் ஏனோ
மாறிய நாடக மறைபொருள் தானோ!
ஆண்டவன் படைப்பினில் ஆறறி வாகி
அன்பென நடித்துமே ஏழறி(வு) என்றோம்
மாண்டிடும் வரையிலும் மாறிட முயலா
மன்னவர் நாமென மண்ணிலே வாழ்வோம்
தாண்டிடா வேலிகள் தாவிடும் ஆர்வம்
தள்ளிடா உலகியல் தந்திடக் கூடும்
காண்பன யவையும் கணத்தினில் மாற
கண்களும் உண்மையைக் காட்டிடா(து) இலங்கும்.
நன்றி.
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
02 / 05 / 2022.
