வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
நாதன் கந்தையா
சாதனை
=============
ஐப்பசி மாதம் கொட்டியது மழை…
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது..
வழித்தடம் பற்றாக்குறையால்
வெள்ளம்
வயலுக்குள் தலை வைத்தது..
அப்பர் மண்வெட்டியுடன்
வரம்பில் நின்று அல்லல் பட்டார்…
வெளியே அடை மழை…
வீட்டுக்குள் உரலை நிறுத்தி
நெல்லு குத்தினாள் அம்மா..
கஞ்சிக்கு.
நெடுவானம் கருவானமாகி
சூரியனை விழுங்கி
ஏப்பம் விட்டது…
ஏப்பம் விட்ட சத்தம் கேட்டு
திடுக்கிட்ட பாட்டி..
மோசமான இடி முழக்கம் என்று
அர்சுனனை உதவிக்கு அழைத்தாள்.
கடுங்குளிர் தொடர் மழை
நாயும் ஆட்டு குட்டிகளும்
திண்ணையில்
ஒதுங்கிக்கொண்டன.
சாய்ந்து கிடந்த மருத மரத்தில்
ஏறியிருந்து மீன் பிடிக்க
தூண்டில் போட்டு காத்திருந்தேன்.
கீழே வெள்ளம்
மேலே கிளையில்
தூக்கணாங் குருவிகள்
கீச்சு மூச்சு போட்டன…
நெடுவானம் வெளுத்தது..
விடுப்பிலிருந்த சூரியன்
புத்துணர்வோடு
சேவையில் சேர்ந்தான்…
அப்பர் சொன்னார் அது
வசந்தகாலம் என்று..
ஆடு மேய்க்க போனபோது
அண்ணாந்து பார்த்தேன்
மழை வெள்ளம் எதையும்
பொருட்படுத்தாமல்…
மருதங் கிளையில்
புதிதாக ஆறு கூடுகள் தொங்கின.
அப்பொழுதும் குருவிகள் கீச் மூச்….
குருவிகளின் சாதனை
அது வென்றார்
அப்பா.
நாதன் கந்தையா.
