புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
பால தேவகஜன்
ஆயிரம் உறவிருக்கும்
அவரவரில் தனித்தனி
பிடிப்பிருக்கும்
அம்மா! உன் ஒருத்தி மீதே
என் அத்தனை பிடிப்புக்களும்
மொத்தமாய் கொட்டியிருக்கும்.
அம்மா! இன்று நீ
என் அருகிலில்லை
என்றாலும் உன்பாசம்
எனைவிட்டு மருகவில்லை
உத்தமியே! உச்சத்தவளே!
என் அச்சம் போக்கி
மிச்சம் குறைவின்றி
உச்சமாய் வளர்த்து
நான் வாழ்வில்
உயர்வுகாணும் வேளையில்
உனதுருவம் மறைத்தாயே!
என் உள்ளம் சிதைத்தாயே!
அம்மா! நீ எனை
ஈன்றபொழுதில்
எத்தனை வலியோடு
தவியாய் தவித்திருப்பாய்.
அத்தனை வலியின் தவிப்பையும்
பெறறெடுத்த எனைகண்ட
கணப்பொழுதுகளில்
மெத்தமாய் மறந்திருப்பாய்
உச்சமாய் மகிழ்ந்திருப்பாய்.
எனக்காகவே வாழ்ந்தாய்
என் கனவையே சுமந்தாய்
உனக்காக நான் என்ன
செய்தேன் அம்மா!
உன் உதிரத்தாலும்
உழைப்பாலும்
உயிர் வாழும் தேகமின்று
தேம்பித் தவிக்கிறதே!
நீயில்லா தேசத்தில்
எனக்கேது பிடிப்பம்மா!
நிலைத்து வாழ ஆசையில்லை
இருந்தும் வாழ்கின்றேன்
உன் நினைவுகளை சுமந்தபடி.
எத்தனை மகிழ்வுகள்
என்னை கடந்திருக்கும்
அத்தனை மகிழ்வுகளும்
அடுத்த கணமே
மறந்து போயிருக்கும்
அம்மா! உன்னோடு வாழ்ந்த
ஒவ்வொரு நிமிட மகிழ்வுகளும்
இன்றும் என் நெஞ்சோரம்
அழிவின்றி நிலைத்திருக்கு
எனக்கான எல்லாமே நீயம்மா!
உன் நினைவுத் தவிப்போடு
என்றுமே வாழ்வேன் அம்மா!
நன்றி
பால தேவா
