நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
பூக்களின் புது வசந்தம்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
பூக்களின் புது வசந்தம்
**************************
அறுசீர் விருத்தம்
===============
சீர் வரையறை: மா மா மா/ மா மா மா
வண்டும் நாடும் வாசம்
வண்ண வண்ணப் பூக்கள்
மண்ணில் தானோ மகிமை
மரங்கள் எல்லாம் அழகாய்
தண்டும் தெரியா திருக்கும்
தானாய் அரும்பும் விரியும்
கண்ணைக் கவரும் காட்சி
காவில் நின்றால் மருட்சி!
சிறப்புத் தருமே சித்திரை
சிவப்பு வெள்ளை இன்னும்
நிறங்கள் பலவாய் இருக்கும்
நிஜமாய் உயிர்க்கும் நிதமும்
மறந்தே போகும் கவலை
மனத்தை வருடும் வண்ணம்
உறவாய் வருமே உலகில்
உதிர்ந்தால் கவலை தானே!
இனிய வசந்தம் இறைவன்
இயற்கை வடிவில் இருந்து
கனிவு கொடுக்கும் காட்சி
கண்கள் குளிரும் என்றும்
அணியாய் இருக்கும் அணங்கும்
ஆரம் சூடி மகிழ்வாள்
மணியாய்த் துலங்கும் மலர்கள்
மனத்தை சுகமாய் நிறைக்கும்!
மல்லி முல்லை முகர
மனத்தை நிறைக்கும் பந்தல்
சொல்லில் அடங்கா சொர்க்கம்
சொந்த வீட்டின் வாசல்
அல்லில்(இரவில்) அமர்ந்தால் அருமை
அகன்று விடுமே துன்பம்
நல்லாய் வாழ்ந்தோம் நாட்டில்
நாடி நிற்போம் வசந்தம்!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றி!
திரு.திருமதி. நடா மோகன் அவர்கட்கு நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களையும் பாராட்டி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!
