அறிந்தவரும் அறியாத வாழ்க்கை

ஜெயம் தங்கராஜா

கவி 756

அறிந்தவரும் அறியாத வாழ்க்கை

பிரசவத்தில் தொடங்கும் சமமாய் அடங்கும்
அரசனாய் இருந்தாலென்ன ஆண்டியாய் இருந்தாலென்ன
மாடங்களிலும் நிகழும் குடிசைகளிலும் நிகழும்
வேடங்கள் களைத்து நாடகம் முடியும்

கோடிகளில் புரண்டு படுத்தவரும் கூட
நாடிகள் அடங்கி ஏறிடுவார் பாடை
கருவறை தொடங்கி கல்லறை வரையாவது
திரும்பியே வராது தீக்கு இரையாவது

நித்திய வாழ்விதென்று எண்ணிவிடும் மானிடா
புத்தியை தட்டியெழுப்பி கேட்டுந்தான் பாரடா
நிலைத்து வாழும் உயிர் ஏதுமில்லை
உழைத்து வாழ்ந்து மாய்வதே வாழ்வினெல்லை

பொய்யும் புரட்டும் வாழ்க்கையில் தலைவிரித்தாடுவதென்ன
செய்யும் செயல்களும் தீமைகளை காவுவதென்ன
பேராசைகள் நினைவுக்குள் நீந்தி விளையாடுவதென்ன
சேராததையும் சேர்க்கும் கனவுகளாய் காண்பதுமென்ன

தவறே செய்யாத மனிதனே இல்லை
தவறை திருத்தாதவன் மனிதனே இல்லை
எண்ணத்தின்படியே சொல்லும் செயலும் என்றாக
இன்பமோ துன்பமோ உள்ளத்தின்படியே உண்டாக

ஜெயம்
16-01-2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading