ஜெயம் தங்கராஜா

ச.சி.ச
காதலர்

சீவனுள் சீவனும் செருகுமே ஒன்றுடனொன்று
சாவதோ வாழ்வதோ வேதமாய் காதலேயென்று
அன்புக்கு அடிமையாகுமே இரண்டு உள்ளங்கள்
கண்களும் பேசியே உண்டாக்கும் இன்பங்கள்

இவன் கண்ணாடியில் அவள் தெரிவாள்
அவள் கனவெல்லாம் இவனே திரிவான்
இரும்பாக இருந்தவன் உருகிவிட்டான் காதலினால்
விரும்பிய பொழுதுகளாய் அன்புத் தேடலினால்

எனக்காக நீ உனக்காக நான்
எனக்கொண்டால் காதலோ சுவைக்கின்ற தேன்
இருவர் நினைவுகளும் ஒன்றாகும் விந்தை
ஒருவர் ஒருவருக்காக வாழுகின்ற வித்தை

தனிமையை அகற்றிவிட்டு புன்னகைக்க சொந்தம்
இனிமையை ஆயிரமாய் அள்ளித்தரும் பந்தம்
காதலர்கள் இல்லாத உலகுமொரு உலகோ
ஆதவனைக் காணாது ஆகாயமும் அழகோ

ஜெயம்
06-02-2024

Nada Mohan
Author: Nada Mohan