ஜெயாஉதயா

ஒளியின்றி ஒளிர்வெதற்கு
*******************************

அறிவொளி ஆற்றலொளி
அறிவியலொளி விடியல்ஒளி/
மடமை ஒழித்து
மனிதம் போற்றுமொழி/

அன்பின்ஒளி அறியாமை
அகற்றும் ஆன்மீகவொளி/
ஒளியின்றி ஒளிர்வெதற்கு
ஓய்வின்றி உழைப்பெதற்கு/

எண்ணற்ற தியாகிகளின்
இன்னுயிர்கள் குடித்து/
மண்ணிற்கு சுதந்திரம்
கிடைத்தும் பலனென்ன?

அமைதியொளி ஆனந்தவொளி
அகங்களில் இல்லையே…!
வறுமையும் பிரிவினையும்
வரிந்துகட்டிக் கொல்லுகிறது…!

பொறுமை இழந்திங்கே
போராட்டம் நிகழ்கிறது!
சாதிகளும் மதங்களும்
சதிவேலைகள் புரிகிறது

ஆதிமன வாழ்க்கையினை
அடியோடு அழிக்கிறது!
பசியும் பட்டினியும்
உயிர்களைக் குடிக்கிறது…!

பணம்மட்டும் பந்தியிலே
பல்லிளித்துச் சிரிக்கிறது!
ஒற்றுமை வேரறுந்து
உலகையே உலக்குகிறது

வேற்றுமை என்றவொன்று
வேர்ப்பிடித்து வளர்கிறது!
குருதி வெறிகொண்ட
குள்ளநரிக் கூட்டங்கள்

பெருகி வந்திங்கு
பொல்லாங்கைச் செய்கிறது!
கொலையும் கொள்ளையும்
கொடிகட்டிப் பறக்கிறது/

மனிதம் மறந்திங்கே
மடமையில் ஆழ்கிறது
புனிதமென்ற சொல்லின்
பொருளையே மறக்கிறது!

இன்னலின்றி எல்லோரும்
இத்தரையில் வாழாமல்
விடுதலை பெற்றுமென்ன
ஒளியின்றி ஒளிர்வெதற்கு?

ஜெயா உதயா

Nada Mohan
Author: Nada Mohan