அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
திருமதி. செ. தெய்வேந்திரமூர்த்தி
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 277 (10/09/2024.)
வலி
“””””
வலியில் வாடிடும் வகைவகை உயிர்கள்
வழியொன் றின்றி வருந்துதல் முறையோ
பலிகொள் இயற்கை பரப்பிய வலியும்
மலிவாய்ப் பெற்ற மருந்திலா நோயும்
ஒலிப்பிலாக் கைப்பேசி ஓதிய நஞ்சும்
சலிப்புடைச் சேவையர் சாற்றிடும் கபடமும்
ஒப்பரும் உறவினுள் ஒளித்திடும் பகையும்
தப்பினைச் சரியெனச் சாதிக்கும் திண்மையும்
பண்பிலாப் பாலகர் பழகிடும் முறையும்
கண்டவர் உள்ளம் கலங்கிடும் வலியும்
பலிகொண் டேகும் பலநிதி இலஞ்சம்
கிலிகொண் டுள்ளே கிளர்ந்தெழக் கோபம்
மலிதல் முறையோ மனக்குறை யகற்றுநீ
வலிதாய் உனைநீ வளர்த்திட வேண்டும்
வலிகொள் மக்கள் வறுமைப் பிணியை
வலிதாம் உழைப்பால் வளைக்கும் நெறியில்
மெலிவார் தங்கள் மேன்மைக் காக
பலியாய்த் தத்தம் பகையைக் கொடுத்து
நலியா மனத்தை நயக்கும் வகையில்
மலிவாம் அன்பை மன்றில் ஏற்றி
கலிதீர் உணர்வைக் கடமை யாக்கி
ஒலியென் றெழுப்பாய் உத்தம னென்றே!
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
09/09/2024.
