தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

கவிஞர் பாவை அண்ணா, வணக்கம்
கவிஞர் பாலரவி அவர்களே வணக்கம்.

காணி – சந்தம் சிந்தும் சந்திப்பு – 222
“”””””
அன்னையுன் ஞாபகம் அங்கேதான் நிறைவதாய்
என்னையும் ஈர்க்குது எங்கெங்கும் மறைவதாய்
மண்ணையும் என்னையும் மட்டுமா பிரிந்தனை
உண்மையாய் வாழ்ந்தவுன் ஊரையும் கடந்தனை

முன்னமுன் வேர்வையும் மூச்சுமே மரங்களாய்
இன்னமும் காண்கிறேன் இங்குள கலங்களாய்
தண்மையும் வெப்பமும் தாண்டிய அடிகளாய்
விண்ணிழிந் தாழ்த்துதே வென்றிடும் பணிகளாய்

என்னவுன் தந்திரம், எங்குளை நினைவினில்
அன்னமுன் மந்திரம் ஆற்றலுன் கரத்தினில்
வண்ணமாய் உன்முகம் வாசலின் வனப்பினில்
திண்ணமாய்ச் சொல்கிறாய் தேடிவா வளவினுள்

தென்னையை மாவுடன் தேக்கையும் நிறுத்தினாய்
மன்னிய பூக்களில் மாலையின் தொடுப்பதாய்
எண்ணிய பாக்களை ஏற்றவுன் குரலதாய்
பண்ணமைத் தாழ்குவை பத்தியின் பரலதாய்

சன்னமாய் உன்குரல் சாரளத் தொலைவினில்
பின்னமாய் என்மனம் போகுதே முடிவினில்
கண்டுதான் ஏற்கிறேன் காணியின் இடங்களில்
கண்ணிலே நீர்த்துளி காணியின் படங்களில்

என்றுதான் பார்ப்பனோ ஏழையுன் இடங்களை
கன்றெனத் தாவுவேன் காணியுள் வருகையில்
மண்ணிதன் மாற்றமும் மாறிடா உறவையும்
திண்ணமாய் ஏற்கவே திரும்புவேன் பறவையாய்!

சின்னதாய்த் தோற்பினும் சீருறு புலத்தினை
வன்னமாய் மாற்றுவேன் வாழிட நிலத்தினை
மண்ணிதன் மாண்பினை மாத்தமிழ்ச் சிறப்பினை
கண்ணிதன் கட்டிலே வைத்திடச் சிறக்குமே!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
06 / 05 / 2023.

Nada Mohan
Author: Nada Mohan