மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட
மழலைகளாய் நாம்,
தாய்மொழிதனை கேட்டு
கருவறையில்
கண்ணுறங்கும் போதே
கற்றிட்ட சிசுக்களாய் நாம்!

இவ்வுலகில் அவதரித்த
பொழுதினிலே,
“அம்மா” என்ற
மூன்றெழுத்து வார்த்தையினை
மொழிந்துவிட்ட
என் தலைமுறையே—கேளீர்!

மொழிதானே நம் முகவரி,
மனதினிலே பதித்திடுவீர்;
வழிபார்த்து நேரமதில் கற்றிடுவீர்,
வாய்திறந்து மொழிந்திடுவீர்,
தாய்மொழியை விழியெனவே
காத்திடுவீர்!

புலம்பெயர்ந்து நாம்
நம் சந்ததியைப் படைத்திட்ட
போதினிலும்,
பன்மொழி பேசும் உலகத்தில்
தாய்மொழியே ஆதாரம் என்றே
நம்பிடுவீர்!

ஆயிரம் மொழிதனை
அகத்தினிலே ஏற்றிடினும்,
அறிவினிலே அவற்றைப்
புடம்போட்டு நிறுத்திடினும்,
வழிகளைத் தந்திடும்
வலி நீக்குவதும் மொழி தானே!!

தாய்மொழியது
நம் வாழ்வினைப் படைத்திடும்;
காத்திடுவீர் உயிரெனவே,
உறவெனவே சேர்த்திடுவீர்!

தலைமுறைகள் கைகளிலே
காத்திரமாய் ஏந்திடுவீர்;
எத்தனை தலைமுறை கடந்தாலும்
வாழவைத்திடுவீர்
நம் தாய்மொழியை!

அதற்கென உயிர்தந்த
உறவுகளை எண்ணிடுவீர்;
அவர்தம் தியாகம் நினைத்திடுவீர்;
தலைசாய்த்து வணங்கிடுவீர்!

மொழி வாழ்ந்தால்
இனம் வாழும்;
தாய்மொழி வாழ்ந்தால்
தலைமுறைகள் வாழும்!
சிவதர்சனி இரா
16/9/2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading