மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கனவுகளில் வழிமாறிக்
கானகத்தில் தடுமாறி
புனலாக ஓடும் காலத்தில்
புயலோடு தொலைந்து போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

பொய்க்கால் குதிரையிலே
போகாத ஊருக்கு
போய்ச்சேரப் புறப்பட்டு
புதை சேற்றினுள்ளே
புதைந்தே போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

உண்மையில்லா உலகில்
உண்மைகளின் ஊற்றைத் தேடி
உதவாத யாத்திரையில்
உருமாறிப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

கண்ணிருப்போர் உலகினிலே
குருடனாகிப் போய்
பேசத் தெரிந்தோர் புவியில்
ஊமையாகப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

உடலில் வலு உள்ளவரை
உழைத்து உழைத்து
நெஞ்சில் ஒரு துளி
ஈரமில்லா மனிதருக்கு
வாரி இறைத்து விட்டு
கல்லறை வாசலில்
காத்து இருக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

என்னைத் தேடும் உயிர்கள்
ஏழுலகிலும் இல்லையென்றே
எனை நானே தொலைக்கவென்று
விலாசமில்லாமல் வசிக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

Nada Mohan
Author: Nada Mohan