ஒளவை

நிலா
———-
வலமாய் வந்து
….. வளர்ந்து தேய்ந்து
பலநாள்த் தாகம்
….. பௌர்ணமி நிலவில்
உலவும் மேகம்
….. உன்னை மறைக்க
கலங்கி நின்ற
….. காலம் நினைவில்

முற்றம் நிறைந்த
….. மணலில் இருந்து
கற்றோம் நூறு
…. கதைகள் நிலவில்
சுற்றம் சூழ்ந்து
…. சோகம் மறந்து
பற்றாய் இருந்தோம்
…. பலநாள் நிலவில்

தனிமை எண்ணம்
….. தூரம் விலக்கி
இனிமை பொங்கும்
….. இன்பம் நிலவில்
கனிவாய் மனதைக்
….. கொள்ளும் அழகில்
பனியாய் விலகும்
….. பகையும் நிலவில்

காதல் நெஞ்சம்
….. கலந்து மகிழ்ந்து
மோதல் நிலையை
….. மறக்கும் நிலவில்
வாதம் வேண்டாம்
….. வரமாய்க் கண்டோம்
பாதம் பணிந்து
….. பகர்வோம் நன்றி.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan