ரஜனி அன்ரன்

கல்லறைவீரர் கனவிதுவோ…..! கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.11.2023

விடியல் கனவினை விழிகளில் ஏந்தி
தாயகக் கனவினை நெஞ்சினில் சுமந்து
இலக்கினை நோக்கிய இலட்சியக் கனவோடு
செங்களமாடி வெஞ்சமர் புரிந்த வீரமறவர்களே
உம் கனவும் நினைவும் தாயகக் காதலே !

உரிமையை வெல்ல ஒற்றுமையைப் பலமாக்க
உலகே வியந்துநிற்க உயிர்த்தியாகம் செய்த உன்னதரே
தியாகத்திலும் தியாகம் அல்லவா உங்கள் தியாகம்
தேகத்தை ஈகம் செய்த தேசமறவர்களே
கல்லறைத் தொட்டிலில் தூங்கிடும் தூயவரே
உங்கள் கனவும் நினைவும் தாயகக் காதலே !

தடைகளைப் பொடியாக்கி உடலை வெடியாக்கி
வீரத்தை துணிவாக்கி வேகத்தை வலுவாக்கி
தணியாத மண்தாகம் குறையாத தமிழ்மோகம்
உரமான உரிமையென உம்கனவுகளோ கோடி
கோடி கனவுகளைச் சுமந்தபடி – நீவிரும்
குழிகளிலே தூங்குகின்றீர் தவிப்போடு – இன்னமும்
ஒட்டுமொத்த எம்மினமும் ஒற்றுமையுமில்லை
ஒருமைப்பாடுமில்லை உரிமைகளும் தானுமில்லை
உங்கள் இலட்சியக் கனவுகளும் கானல் நீராச்சே !

Nada Mohan
Author: Nada Mohan