வர்ண வர்ணப் பூக்கள் 65
வர்ண வர்ண பூக்களே!
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்…285.தலைப்பு!
அழியாத கோலம்
……………………
ஞாலம் முழுதும் எத்தனை கோலம்
காலம் தருமே புதிய பாடம்!
அழியாக் கோலம் ஏதும் உண்டா?
மொழிவாய் நீயும் மெய்மைக் கண்டா?
செயற்கை யாவும் மாயக் கோலம்
இயற்கை போடும் எண்ணிலாக் கோலம்!
எதிலும் காண்பாய் உண்மை ஆழம்
புதுமை பூக்கும் அழியாக் கோலம்!
உலகில் அழிவின் பெரும்போர்க் கோலம்
நிலத்தில் அணுப்போர் சூழும் காலம்!
நீயா நானா? என்ற கேள்வி
நிகழ்த்தும் அதுவே அறிவின் வேள்வி
தாயாய் மகவாய் அலையும் கோலம்
தரணியில் அதுவா அழியாக் கோலம்?
மாயா உலகில் எல்லாம் கோலம்
மனத்தில் ஈழம் அழியாக் கோலம்!
மார்கழித் திங்கள் போடும் கோலம்
மாயக் கண்ணன் காதல் கோலம்!
தலைவர் போட்ட புரட்சிக் கோலம்
தமிழீ ழத்தின் கொள்கைக் கோலம்
மடந்தையர் வண்ணக் கிளியின் கோலம்
மாறி மலர்ந்தது புலியின் கோலம்!
பூமித் தாய்மேல்
எத்தனை கோலம்?
புலிகள் போட்டார் அழியாக் கோலம்!
.ஆசிரியர்:
.அபிராமி கவிதாசன்.
05.11.2024
