மொழியும். கவியும்………

இரா.விஜயகௌரி

மொழியும் உணர்வும் இழைந்து அசைய
மொழிதலின் அழகில் முத்தமிழ் விளைய
இசையும் அசைந்து இயல்புற தெளிய
குழைந்து குழைந்து குலவிடும் குழந்தை

கவினுறு எழிலை கருத்தாய் பின்னி
எண்ணச் சிதறலை எழுத்துருவாக்கி
விசையுறு மொழியாய் விரல்வழி நுழைந்து
இதயச்சுரங்கம் தொட்டெழும் பேரிழை

மொழியே அழகு மொழிதலே அமிழ்து
தீட்டிய வைரம் போலொரு தீந்தமிழ்
அரங்கம் கண்டிடும்ஆளுமைத் தமிழாழ்
சிங்கப் பெண்ணாய். சீறிப்பாய்வாள்

எத்தனை வீரியம்எங்கனம் வித்தகம்
வேழம் அசைந்தே பிளிறிடும் பெருங்குரல்
அட மொழிமகள் பின்னிய அற்புத காவியம்
கட்டியம் கூறிடும் கன்னித்தாரகை மொழிக்குள் கவிதை

Nada Mohan
Author: Nada Mohan