“அறிவின் விருட்சம்”
அறிவின் விருட்சம்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-260,
சீர்வரையறை:அறுசீர் விருத்தம்
தலைப்பு! “பணம்”
…………
குணத்தினைக் குப்பை என்றே
கூறிடும் பல்லோர் இங்கே
பணத்தினை நாடிச் செல்வார்
பகையினை வெல்வ தற்கே
கணத்தினில் பணத்தைத் தேடக்
கடிந்துரை நல்கிச் செல்வார்
பணத்தினை நீயும் ஈட்டி
பாரினில் வாழ்க நன்றே!.
பண்டைய நாளி லெல்லாம்
பண்டமே மாற்றிக் கொள்வார்
உண்டிட உடுத்தற் தெல்லாம்
உரியதைப் பெற்றுக் கொள்வார்
கண்டிடார் பணமே என்றால்
கண்டிடார் உறவ ரெல்லாம்
அண்டியே வருவார் செல்வம்
அடைந்திடில் நீயென் றாலே!
. உறவுகள் பணத்தை வைத்தே
உனையெடை போடல் காண்பாய்!
திறமுடன் உழைத்தே வெல்வாய்!
தீதறப் பணத்தைச் சேர்ப்பாய்!
அறத்தினில் ஓங்கி நிற்பாய்
அடுத்தவர்க் கீந்தே வாழ்வாய்!
மறத்தமிழ் ஈழம் மீட்க
மண்மிசை பணத்தால் வெல்வாய்!
– கவிஞர் அபிராமி கவிதாசன்
09.04.2024
