புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 236 அவன்
நடந்து
கொண்டுதானிருக்கிறான்
ஆம்
நாளையை
நோக்கிய அவனது
நீண்ட பயணம்
தொடர்கிறது
தோன்றிய
காலம் முதல்
வெறும்
கலயங்கள்
உருண்டோடும்
ஒலிகளுடன் வாழ்ந்த
அவனின்
நாளைய தேடல்களின்
ஆதாரம்
நம்பிக்கை ஒன்றே !
அகிலம்
அவனுக்குச் சூட்டிய
மகுடம்
ஏழை !
வாழ்க்கை
அவனுக்கு அளித்த
வெகுமதியின் பெயர்
வறுமை !
ஏற ஏற
சறுக்கும் ஏணி ஒன்றே
அவனுக்கு கொடுக்கப்பட்ட
முன்னேற்றப் பாதை
பாதையொன்றைப் போட்டு
அதிலே
பலவகை முட்களைத்தூவி
தவித்துக் கொண்டே
நடக்கும் அவனைப்
பார்த்து ரசிக்கும்
சிங்கார உலகம்
சளைக்கவில்லை
அவன் இன்னமும்
சகித்துக் கொண்டே
சாதனைகளைத் தேடி
வேதனைகளின் வழியாக
தொடங்கி விட்டான்
நெடியதோர் பயணம்
ஏழை
எனும் சொல்லை மாற்றி
கோழை
நானில்லை என்று
நாளை
தன் வாழ்வைச் செழிக்கும்
சோலை
ஆக்கிடவே பாவம்
பாலை
வனத்தினில்
தாகம் தீர்த்திட
எண்ணுகிறான்
வேளை
ஒன்று பிறந்திடும் நிச்சயம்
தோழன்
சோகங்கள் யாவும்
மறைந்திடும்
நாளைகளின் நிறம்
மாறிடும் போது
ஏழைகளின் வாழ்வும்
சிறந்திடும்
ஆன்மாவின்
வாசலில் காண்கின்ற
அனைவரும்
ஒன்றேயெனும் உண்மை
ஆன்மீக
ராகமாக ஒலித்திடும்போது
கைகளை
இணைத்திடும் உணர்வு
நிச்சயமிந்த
உலகத்தில் நிலையாகும்
சக்தி சக்திதாசன்
