இருபத்தி எட்டாம் அகவை -63
“நீளட்டும் வீச்சம்”
சிவரஞ்சினி கலைச்செல்வன்
அன்புள்ள தோழி
வணக்கம்.நீ அறிந்திருப்பாய் என் செய்தி; எனக்கும்!
அண்ணனுக்கும்
ஏற்பட்ட பிணக்கை.
அண்ணனா காதலனா கேள்வி
அன்றாடம் சில நாள் மன கேள்வி
என் வாழ்வு எதிர்காலம் விருப்பம்
எதையுமே மதியாதோர் இடத்தே
ஏன் இருப்பான் என்ற எண்ணம் மோத
இடம் மாறி விட்டேன் நான்
வாழ..
தூரத்து உறவு எனக்கு தேவன்
துட்ட ,கெட்ட பழக்கம் இல்லா
தூயோன்
பாவம் அவன் என் செய்வான்
கால் ஊனம் போரில்
பட்ட தோட்ட துளைத்துவிட்ட தாலே
காலில் இப்போ செயற்கை கால் பொருத்தி
கருமம் எல்லாம் செய்கின்றான் சிறப்பாய்
முடவன் என்று ஊனமுற்ற தாலே
முன் நின்று உதவி செய்த தாலே
மருந்தகத்தில் அரும்பிய எம் காதல்
மனம் ஒன்றி மணம் செய்ய கேட்க
மளமில்லை அண்ணனுக்கு ஏற்க
மாறாத கால் ஊனம் அதுவாம்
மணம் செய்தால் பாழாகும் வாழ்வாம்
என் வாழ்வு என் குடும்பம் துன்பம்
எதையுமே எதிர்கொள்வேன் அஞ்சேன்
அன்பான கணவன் என்று ஒருவன்
அமைந்தானே
அது போதும் எனக்கு..
அன்பு ள்ள உன் நண்பி
