ஜெயம் தங்கராஜா

சசிச

பள்ளிப்பருவம்

அந்த நாள் ஞாபகங்கள் நெஞ்சில் நின்றாடுதே
இந்த நாள் மீட்டியே நினைவுகளைக் கொண்டாடுதே
திரும்பியே பார்த்திடின் பள்ளிப் பருவத்தை
அரும்பியே ஆனந்தம் வருடுதே உள்ளத்தை

பறவைகளாய் பறந்துகொண்டு பேசி மகிழ்ந்த நேரம்
மறந்துகொண்டோம் துன்பங்களை நெஞ்சில் இல்லை பாரம்
பள்ளம் மேடு பார்க்காமல் துள்ளி திரிந்தோம்
உள்ளமெங்கும் வெள்ளை பேதமின்றி சிறகடித்துப் பறந்தோம்

தயங்கியபடி பாடசாலை சென்ற முதல் நாட்கள்
பயத்தைக் காட்டியே படிப்பையும் ஊட்டும் வாத்தியார்கள்
அழுதுகொண்டு வீட்டிற்கு ஓடியதும் ஞாபகம் இருக்கின்றது
இழுத்துவந்து அன்னை மீண்டும் விட்டதும் சிரிப்பாயிருக்கின்றது

சிலேட் பென்சிலால் கிறுக்கியதும் அழித்ததும் உடைத்ததும்
பிலேட்டால் மொட்டைப் பென்சிலை சீவி எழுதியதும்
நீல மைவிட்டு தெளித்து எழுதிய மைப்பேனாவும்
தாளில் ஊறாமல் எழுதிட போல்பொய்ண்ட் பேனாவுமென

பள்ளிக்கு தாமதமாச் சென்று வாங்கிய அடிகளும்
கள்ளமொளித்து வகுப்பிற்கு பிடிபட்டு மானம்போன நொடிகளும்
மொட்டைத்தலை ஜோண் மாஸ்டர் வந்தாலே முசுப்பாத்தி
குட்டுப்போட்டே படிப்பிப்பார் பாடத்தை ஜேம்ஸ் வாத்தி

நட்பு என்பதை கற்பு போலல்லவா மதித்தோம்
வம்பு செய்துமே வாழ்க்கையை கலகலப்பாக அனுபவித்தோம்
அந்த அற்புதப் பருவமதின் ஞாபகங்கள் அழிவதில்லை
இந்த உருவம் உருக்குலைந்தாலும் நினைவுகள் ஒழிவதில்லை

ஜெயம்
28-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading